சேலம் மாவட்டத்தில் விநோதம்!! கோவில் கட்ட ஏலியன்களிடம் பெர்மிஷன் வாங்கிய நபர்!!

Photo of author

By Sakthi

SALEM: சேலம் மாவட்டத்தில் விநோதமாக ஒரு நபர் ஏலியன்களுக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார். மேலும் வருங்காலங்களில் இனிமேல் எல்லாமே ஏலியன்கள்தான் என்று அந்த நபர் கூறியுள்ளார்.
ஏலியன்களுக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும் இந்த விநோதமான நிகழ்வு சேலம் மாவட்டம் மல்லமுப்பம்பட்டியில் நடந்துள்ளது. இங்கு வசிக்கும் சித்தர் பாக்கியா என்பவர் இந்த விநோதமான கோயிலை கட்டியுள்ளார்.
மேலும் இவர் கட்டியுள்ள கோயிலில் வித்தியாசமான முறையில் விநோதமான முறையில் கடவுளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சிவலிங்கத்தின் உருவத்தில் வராகி அம்மன், ஆறுமுகம் கொண்ட முருகனுக்கு பதிலாக 4 முகம் கொண்ட முருகன் சிலை, இரட்டை ஆருடை சிவலிங்கம், ஐந்து முகம் கொண்ட வடிவத்தில் காளி சிலை போன்ற சிலைகளும் சித்தர் பாக்கியா இந்த கோயிலில் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் சித்தர் பாக்கியா அவர்கள் ஏலியன்களுக்கு கோயில் கட்டியது தொடர்பாக “இந்த ஏலியன் கோயிலை கட்டுவதற்கு நான் ஏலியன்களிடம் அனுமதி வாங்கினேன். அதன் பின்னர் தான் கோயிலை கட்டினேன். ஏலியன்களுக்கு சிலைகளை வைக்கவும் கோயில் கட்டவும் ஏலியன்கள் அனுமதி தந்துள்ளதால் அனைவரும் ஏலியனை வழிபட்டு மகிழ்ச்சியை பெறுங்கள்.
இந்த உலகத்தில் வருங்காலங்களில் எல்லாமே ஏலியன்கள் தான். அடுத்தடுத்து வருங்காலங்களில் ஏலியன்களின் வருகை அதிகரிக்கும். உலகில் ஏலியன்கள் இருக்கின்றதா இல்லையா என்பதை குறித்து உலக நாடுகள் அனைத்தும் ஆராய்ச்சி நடத்தி வருகின்றது.
உலகத்தில் ஏலியன்கள் இருக்கின்றதா என்பது தெரியாது. ஆனால் ஏலியன்கள் உண்மையாகவே இருக்கின்றது. ஏலியன்கள் வருங்காலத்தில் உலகத்திற்கு வரும். ஏலியன்கள் உலகத்திற்கு ஆத்மரூபத்தில் வருகை தரவுள்ளது. ஏன் தற்பொழுதும் ஏலியன்கள் உலகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது.
ஏலியன்களை நாம் வணங்கி வந்தால் நாம் நினைத்தது எல்லாம் நடக்கும். வாழ்க்கை, தொழில், கல்வி என அனைத்திலும் நாம் முன்னேற்றம் அடையலாம். ஏலியன்களை தரிசித்து விட்டு வந்தால் சில நாட்களிலேயே நினைத்தது அனைத்தும் நடக்கும்.
நான் ஏலியன்களுடன் பேசியுள்ளேன். ஏலியன்களை நான் பார்த்துள்ளேன். இதனால் என்னை பைத்தியம் என்று நினைக்க வேண்டாம். என்னுடன் ஏலியன்கள் இரண்டு முறை பேசி இருக்கின்றனர்.
இனி ஏலியன்களின் வருகை பூமியில் அதிகரிக்கும். உலகத்தை அழிவில் இருந்து பாதுகாக்கக் கூடிய ஒரே தெய்வம் ஏலியன்கள் மட்டும் தான். மக்களுக்கு ஏலியன்கள் எந்தவிதமான கெடுதலும் செய்ய மாட்டார்கள். அவர்கள் நமக்கு நன்மையை செய்யவே நம்மை தேடி வருகிறார்கள். நமக்கு நன்மையை செய்ய தேடி வருபவர்களுக்காக நான் இந்த கோயிலை அமைத்துள்ளேன்.
சினிமாக்களில் வருவது போல ஏலியன்கள் கொம்பு வைத்திருப்பது போன்ற உருவங்களில் இருக்க மாட்டார்கள். சாதாரணமாக நம்மை போலத்தான் இருப்பார்கள். ஆண், பெண் போலத்தான் இருப்பார்கள். எனவே தற்பொழுது ஏலியன்கள் மனிதர்கள் ரூபத்தில் இருக்க வாய்ப்பு இருக்கின்றது” என்று அவர் கூறினார்