திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சாதியின் பெயரைச் சொல்லி கொடுமைப்படுத்திய கணவரின் குடும்பம்! எஸ் பி அலுவலகத்தில் மனைவி தர்ணா போராட்டம்!

0
91

காதல் செய்து திருமணம் என்று 2 மாதம் குடும்பம் நடத்திய கணவர் அதன்பிறகு தாழ்த்தப்பட்ட பெண் என தெரிந்தவுடன் கைவிட்டு சென்ற கணவர் சசிகுமார் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து இளம்பெண் உறவினர்களுடன் இரவு நேரத்தில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

கரூர் மாவட்டம் சிந்தாமணி பட்டி பகுதியைச் சார்ந்தவர் ரேவதி இவர் அதே பகுதியில் நர்சிங் படித்து வருகிறார். இவரை தரகம்பட்டி அருகே சேவலூரை சேர்ந்த சசிகுமார் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டு கோவையில் இருக்கின்ற அவருடைய நண்பருடைய வீட்டில் 3 மாதத்திற்கு மேலாக ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், சசிகுமாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த விவகாரம் தெரிய வர அவர்களை அழைத்து வந்து கரூரில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து அந்த பெண்ணை ஜாதியின் பெயரைச் சொல்லி கொடுமைப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அதோடு பெற்றோர்கள் மிரட்டியதன் காரணமாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண் என காரணம் காட்டி கணவர் சசிகுமாரும் தன்னை கைவிட்டதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதோடு சசிகுமார் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை வழங்கினார். புகாரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு குளித்தலை துணை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் அவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் அனுப்பி வைத்தார். ஆனால் புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் டிஎஸ்பி ஸ்ரீதர் காலம் தாழ்த்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளாத டிஎஸ்பி மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியும் திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு ஜாதியை காரணம் காட்டி ஏமாற்றிய தன்னுடைய கணவர் சசிகுமார் மீதும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நர்சிங் மாணவி ரேவதி தன்னுடைய உறவினர்களுடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது.

இதனை அடுத்து கரூர் சரக டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான காவல்துறையை சேர்ந்தவர்கள் சசிகுமார் மீது உறுதியாக வழக்கு பதிவு செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவு பிறப்பித்திருப்பதாக உறுதியளித்ததன் பெயரில் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக, அந்த பகுதியில் வெகு நேரம் பரபரப்பு உண்டானதாக தெரிகிறது.