TVK ADMK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். இதற்கு மாறாக இந்த முறை திராவிட கட்சிகளுடன் போட்டி போட தவெக களத்தில் குதித்துள்ளது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த விஜய்க்கு ஆரம்பத்திலிருந்தே நல்ல வரவேற்பு இருந்தது. இவருக்கு இயல்பாகவே ரசிகர்கள் அதிகளவில் இருந்ததால், இவர் கட்சி தொடங்கிய உடன் அவர்கள் அனைவரும் தொண்டர்களாக மாறிவிட்டனர். இந்நிலையில் இவர் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார்.
இவரை தொடர்ந்து ஓபிஎஸ், தினகரன், சசிகலா என பலரும் இணைவார்கள் நேற்று நினைத்த சமயத்தில் அது தற்சமயம் வரை ஈடேறவில்லை. இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரான ஓபிஎஸ் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள், அதிமுக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். ஆனால் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த பின் டிசம்பர் 24 ஆம் தேதி தனது கெடுவை மாற்றியமைத்தார்.
இதனால் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதங்கள் கிளம்பி இருக்கிறது. எப்படியாவது மீண்டும் அதிமுகவில் சேர வேண்டுமென ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இந்த சமயத்தில், இது நிறைவேறாத காரணத்தினால், இவர் வேறு முடிவை எடுத்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். அந்த வகையில், இவர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வந்துள்ளது. இது இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ஓபிஎஸ்யின் செயல்பாடுகள் அவர் தவெகவில் சேர்வதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்துகின்றன.
அந்த வரிசையில் முதலாவதாக, விஜய்யின் ஈரோடு பரப்புரை தொடர்பாக ஓபிஎஸ்யிடம் கேட்ட போது, என்ன ஏன் வம்புக்கு இழுக்குகிறீங்க என்று பதிலளித்துள்ளார். மேலும் விஜய் பிரச்சார பயணத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்து கேட்ட போது, அவை தேவையில்லாதது என்று கூறினார். இது மட்டுமல்லாமல் ஓபிஎஸ், விஜய்யை எந்த ஒரு இடத்திலும் விமர்சித்தது கிடையாது. விஜய் பற்றி கேள்வி கேட்டாலே அதனை அறவே தவிர்த்து வருகிறார். இவை அனைத்தும் ஓபிஎஸ் தவெகவில் இணைவதற்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.