மழையின் காரணமாக என்னால் நினைத்த உச்சத்தை அடைய முடியவில்லை! – மாரியப்பன்
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 1.75 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். இந்த போட்டிகள் தொடங்கிய போது தான் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எனக்கு ஒன்றும் பிரச்சினையாக தெரியவில்லை. ஆனால் 180 மீட்டர் உயரம் தாண்டிய பிறகு மழை அதிகமானது. அதன் காரணமாக எனது ஊனமான காலில் அணிந்திருந்த சாக்ஸ் ஈரமாகி விட்டது. அப்போது ஓடிச்சென்று அதிக உயரம் தாண்டும் போது கால் வழுக்கியதன் காரணமாக என்னால் தங்கம் வாங்கும் அளவிற்கு உயரம் தாண்ட முடியவில்லை.
இந்த மழை வராமல் சீதோஷ்ண நிலை சரியாக இருந்திருந்தால் நான் நிச்சயம் 1.90 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றிருப்பேன். எனது லட்சியம் மழையினால் வீணாகி விட்டது. நான் சிறப்பாக விளையாடி இருந்தால் 1.90 மீட்டர் உயரம் தாண்டி இருப்பேன். மேலும் தங்கப் பதக்கத்தையும் வென்று இருப்பேன், என்றும் உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற எனது இலட்சியம் இந்த ஒலிம்பிக்கில் நிறைவேறவில்லை.
அடுத்த முறை கண்டிப்பாக வரலாறு படைக்க முயற்சிப்பேன். கொரோனா நபர்களுடன் நெருங்கி இருந்ததால் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை நான் இழந்தேன். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்தேன். அது மட்டுமின்றி பயிற்சியிலும் தனியாகவே ஈடுபட வேண்டியதாகிவிட்டது. ஆனாலும் நான் தேசத்துக்காக பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தேன். அதை செய்து காட்டியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாரியப்பன் கூறினார்.