NTK TVK: சென்னை எம்ஜிஆர் நகரில், முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றும் நிகழ்ச்சியை நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தினர். இதில் உரையாற்றிய அவர், பல முக்கிய அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்தார். வரலாற்றில் பல துப்பாக்கிச் சூட்டுகள் மறைக்கப்பட்டன. இன்று கரூர் சம்பவம் பற்றி பேசுகிறவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை மறந்து விட்டனர்.
ஜாலியன் வாலாபாக் பற்றி பேசுபவர்கள் பெருங்காவல் நல்லூர் போராட்டத்தை நினைவில் கொள்ளவில்லை எனக் கூறினார். மேலும், மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் என தெரிந்தும், 60 ஆண்டுகளாக சரி செய்யாமல் இருக்கும் அரசியல் தலைவர்களே உண்மையான பிரச்சினை. அதிகாரத்தில் இல்லாத போது இந்திக்கு எதிராக பேசுபவர்கள், அதிகாரத்தில் வந்ததும் இந்தியில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பாஜகவை விமர்சித்தால் ஒரு மதத்தின் கைக்கூலி என்கிறார்கள்.
திமுகவை விமர்சித்தால் ஆர்எஸ்எஸ் கைக்கூலி என்கிறார்கள். நாங்கள் எவருக்கும் கூலி அல்ல எனவும் அவர் கூறினார். விஜய்யை பற்றிய கேள்விகள் குறித்து விளக்கமாக கூறிய அவர், நாங்கள் விஜய்யை எதிர்க்கவில்லை. சில கேள்விகளை மட்டும் முன் வைக்கிறோம், அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு எங்களை எதிர்க்கிறார்கள் என்று கூற கூடாது என்று தெரிவித்தார். இறுதியில், நேரம் சிறிது மீறி விட்டது. இதற்காக வழக்கு போட்டு தேர்தல் காலத்தில் எங்களை அலைக்கழிக்க வேண்டாம் என போலீசாரிடம் சீமான் கேட்டு கொண்டு தனது உரையை முடித்தார்.

