AMMK ADMK DMK: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சமயத்தில் கூட்டணி குறித்தும் விவாதித்து வருகின்றனர். மேலும் எப்போதும் போல தனித்து போட்டியிடும் நாதக கிட்டத்தட்ட 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நியமித்து விட்டது. முதல் முறை தேர்தலை சந்திக்க இருக்கும் தவெகவும் திராவிட கட்சிகளுக்கு இணையாக தேர்தல் பணியில் வேகமெடுத்துள்ளது.
இவ்வாறு தமிழக அரசியல் புதிய வேகத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை அதற்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. இபிஎஸ்யால் நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில், ஓபிஎஸ், தினகரன், சசிகலாவின் நிலைமை என்னவென்றே தெரியவில்லை. செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உடன் இவர்கள் மூவருடன் நெருக்கமாக இருந்ததால், தவெகவில் இணைந்த கையுடன் இவர்களும் விஜய் கட்சியில் ஐக்கியமாவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெறாததால், இவர்கள் தவெகவில் இணைவதில் விஜய்க்கு விருப்பமில்லை என்று பலரும் கூறினார்கள். மேலும் அதிமுக சார்பில் நடந்த பொதுக்குழு கூட்டத்திலும் நீக்கப்பட்டவர்களை சேர்க்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த கட்சி சேர வேண்டுமென்ற முடிவை எடப்பாடி பழனிச்சாமி தான் எடுப்பார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக இவர்கள் பாஜக கூட்டணியில் இணைவதற்கு கூட இபிஎஸ் சம்மதிக்க மாட்டார் என்பது தெளிவானது.
இதனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்பது நிரூபணமானது. தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில் இவர்கள் மூவரும் தனித்து நின்றால் இவர்களின் அரசியல் எதிர்காலம் காணாமல் போய் விடும் என்பதால், இவர்கள் திமுகவில் இணைய முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் மூவரும் அம்மாவின் தொண்டர்கள் என்று கூறி வரும் நிலையில், ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த திமுகவில் இணைவது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.