பயிற்சியின் போது இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷார் அருகே தொழில்நுட்ப கோளாறால் விபத்துக்குள்ளகியுள்ளது. இந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி விமானத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தார் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே உள்ள விமானப்படை தளத்திலிருந்து, மிக்-29 ரக போர் விமானம் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்ட அந்த விமானத்தில் ஒரு பைலட் மட்டும் பயணித்துள்ளார். இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுகார்பூர் கிராமத்திற்கு மேலே பறந்தபோது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக சென்றுள்ளது. இதனையடுத்து கீழே சென்ற விமானம் சிறிது நேரத்திலேயே வயல்வெளியில் விழுந்தது. இந்நிலையில் விமானம் தரையை தொடுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பே, அந்த விமானத்தை ஓட்டி சென்ற பைலட் பாராசூட் மூலம் வெளியே குதித்துள்ளார்.
இதனால் விமானத்தில் பயணித்த விமானி காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து கீழே விழுந்த விமானம் சிதறி தீப்பிடித்து எரிந்துள்ளது. கீழே குதித்த விமானியை ஹெலிகாப்டர் மூலமாக மீட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலை 10.40 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக உள்ளூர் காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் கார்க் தெரிவித்தார். மேலும், விமானி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.