களத்தில் அவர் இருந்தால் எங்களுக்கு வெற்றி நிச்சயம்! தோனிக்கு புகழாரம் சூட்டிய ஜடேஜா!

Photo of author

By Sakthi

கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற பரபரப்பு தற்போதே தொற்றிக்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த பரபரப்பு ஐபிஎல் போட்டி தொடங்கியதிலிருந்தே இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நடப்பு சாம்பியனான சென்னை அணி மீண்டும் கோப்பையை தக்க வைக்குமா? என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகமாக இருந்து வருகிறது.

ஆனால் அந்த அணி ஆரம்பம் முதலே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சூழ்நிலையில், தற்போது அந்த தோல்விகளிலிருந்து மெல்ல, மெல்ல,மீண்டெழுந்து வருகிறது.

அந்த அணி தொடர் தோல்விகளை சந்திப்பதற்கு காரணம் அந்த அணியின் கேப்டனை மாற்றியது தான் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் கிரிக்கெட் வட்டாரங்களில் விசாரித்தால் ஜடேஜா அனுபவமிக்க வீரர்தான் அவர் மீது தேவையில்லாமல் விமர்சனங்கள் வைப்பது தவறான விஷயம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மும்பை அணியுடன் மோதிய சென்னை அணி முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இமாலய வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் மும்பை அணி நிர்ணயம் செய்த 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற சூழ்நிலையில், மகேந்திரசிங் தோனி 1 சிக்சர் 2 பவுண்டரி பின்னர் 2 ரன்கள் என அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 40 வயதானாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் அவர் கில்லாடி தான் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வெற்றிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, ஆட்டம் நகர்ந்த விதத்தை பார்க்கும் போது நாங்கள் மிகவும் பதற்றத்துடன் இருந்து வந்தோம். ஆனால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் சிறந்த பினிஷர் களத்தில் இருந்ததால் எங்களுக்கு வாய்ப்பிருப்பதாக நம்பினோம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர், கடைசி பந்து வரை தோனி நிலைத்து நின்று விட்டால் நிச்சயமாக போட்டியை வெற்றிகரமாக முடித்து விடுவார் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அதனை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் ஜடேஜா.