பொதுவாக இந்த சுழிகள் என்பது சாமுத்திரிகா லட்சணத்தில் இருக்கும் குணங்களோடு தொடர்புடையது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த சாமுத்திரிகா லட்சணம் என்பது ஒருவருடைய கண்கள் இப்படி இருந்தால் என்ன பலன்? ஒருவருடைய மூக்கு இப்படி இருந்தால் என்ன பலன்? என்பது குறித்து பலவிதமான தகவல்களை கூறும் ஒரு அறிவு தொகுப்பாகும்.
இந்த தொகுப்பில் ஒருவருடைய தலையில் இரட்டை சுழி இருந்தால் அதற்கு என்ன பலன் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. பொதுவாக இரட்டை சுழி இருப்பவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்றும், அவர்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கும் எனவும் கூறுவார்கள்.
மனிதர்களைப் போன்று சில உயிரினங்களுக்கும் இரட்டை சுழிகள் இருக்கும். புதிதாக மாடு வாங்கும் பொழுதும் கூட, சுழி பார்த்து வாங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். இந்த சுழிகள் இருப்பதில் பல விதங்கள் உள்ளன. அதாவது ஒருவருக்கு இடது பக்கத்தில் சுழி இருக்கும், மற்றொருவருக்கு வலது பக்கத்தில் சுழி இருக்கும். இதுபோன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சுழிகள் இருக்கும்.
பொதுவாக எதிரெதிர் சுழிகள் இருப்பவர்கள் இணைந்தால் அவர்களுக்குள் ஒரு நல்ல நட்புறவு ஏற்படும். அதாவது ஒருவருக்கு வலது பக்கத்திலும் மற்றவருக்கு இடது பக்கத்திலும் சுழிகள் இருந்தால் அவர்கள் நல்ல நண்பராகவோ அல்லது நல்ல கணவன் மனைவியாகவோ இருப்பார்கள். அவர்களுக்குள் ஒற்றுமை என்பது அதிகமாக இருக்கும்.
ஆனால் இவ்வாறு இல்லாமல் இருவருக்கும் ஒரே பக்கத்தில் சுழிகள் அமைந்து விட்டால், இருவருக்கும் சிறிது கூட ஒத்துப் போகாது. அதுவே ஒருவருக்கு இரட்டை சுழிகள் அமைந்து இருந்தால் அவர்கள் வாழ்வில் நிறைய வெற்றிகளை காண்பார்கள் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இரட்டை சுழி இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் நடைபெறும் என்பது தவறான கருத்து.
இந்த இரட்டை சுழிகள் வலது பக்கத்தில் மட்டுமே இரண்டு சுழிகளும் அமைந்து இருந்தால் அவர்களுக்கு நிறைய பேரும் புகழும் கிடைக்கும் என்றும், வலது பக்கத்தில் ஒரு சுழியும் இடது பக்கத்தில் ஒரு சுழியும் இருந்தால் அவர்கள் சிறிது முயற்சி செய்து தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும், இந்த இரட்டை சுழிகள் இடது பக்கத்தில் மட்டுமே இரண்டு சுழிகளும் அமைந்துவிட்டால் அவர்கள் மிகவும் கடினமாக உழைத்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்றும் கூறுவார்கள்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் பலரது வாழ்க்கை அனுபவங்களை ஆராய்ந்து உளவியல் ரீதியாக கூறப்பட்ட கருத்துக்களே ஆகும். ஒரு சிலருக்கு நினைத்தது நினைத்த உடன் கிடைத்து விடும், சிலருக்கு முயற்சி செய்தால் கிடைத்துவிடும், அதேபோன்று ஒரு சிலருக்கு கடினமாக போராடினால் மட்டுமே கிடைக்கும். எனவே அனைவரது வாழ்க்கையிலும் முயற்சி என்பது மிகவும் அவசியம்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் நமது முன்னோர்கள் கூறி சென்றவையே ஆகும். எனவே எனக்கு இந்த வகையில் சுழி இருப்பதனால், எனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று முடிவு செய்து விடக்கூடாது. முயற்சி செய்தால் கண்டிப்பாக அனைவருக்கும் பலன் கிடைக்கும்.