நமது வீடுகளில் புதியதாக ஒரு பொருள் வாங்கி வைக்கிறோம் என்றால் அதனை மற்றவர்கள் பார்க்கும் பொழுது இது நன்றாக உள்ளதே.. எங்கு வாங்கினீர்கள்? என்று அந்தப் பொருள் அவர்களின் கவனத்தை ஈர்த்து அந்த கேள்வியை நம்மிடம் கேட்க வைக்கும். அது போன்று தான் ஒரு சில பொருட்கள் வசிய தன்மையை கொண்டதாக இருக்கும். அத்தகைய பொருட்கள் நமது வீட்டில் இருந்தால் பல விதமான சக்திகளையும் நமக்கு ஈர்த்து தரும். அந்தப் பொருட்கள் எவை எவை, நமது வீடுகளில் பண சக்தியை ஈர்த்துக் கொடுக்க எந்தெந்த பொருட்களை வைக்க வேண்டும்? என்பது குறித்து தற்போது காண்போம்.
1. கல் உப்பு ஜாடி: பெரும்பாலான வீடுகளில் தற்போதெல்லாம் தூள் உப்பினை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கல் உப்பினை தான் நாம் பயன்படுத்த வேண்டும். அந்த கல் உப்பினை பீங்கான் அல்லது மண்பானையால் ஆன ஜாடியில் போட்டு வைப்பதன் மூலம் பல விதமான சக்திகளை நமக்கு ஈர்த்துக் கொடுக்கும். ஆனால் இந்த கல் உப்பினை பிளாஸ்டிக் அல்லது சில்வர் போன்ற பாத்திரங்களில் வைத்து பயன்படுத்தக் கூடாது. அது நமது உடலுக்கு நல்லதும் அல்ல.
2. நிறைவான அரிசி பாத்திரம்:
நாம் அரிசியினை வாங்கி ஒரு பாத்திரத்தில் முழுமையாக கொட்டி வைத்திருப்போம். தினமும் அதனை பயன்படுத்தும் பொழுது குறைந்து கொண்டே வரும். அவ்வாறு குறையும் பொழுது கால் பாத்திரத்திற்கு குறைவாக ஆகும் முன்னரே மீண்டும் அரிசினை வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
3. வலம்புரி சங்கு: நமது பூஜை அறையில் வலம்புரி சங்கினை வாங்கி வைத்துக் கொள்வது பலவிதமான அனுகிரகத்தை நமது குடும்பத்திற்கு கொடுக்கும்.
4. குங்குமம்: நமது வாசலுக்கு பயன்படுத்தக்கூடிய குங்குமம் என்ற ஒன்று உள்ளது. அதேபோன்று நமது நெற்றியில் வைக்கக்கூடிய குங்குமம் என்ற ஒன்றும் உள்ளது. இந்த நெற்றியில் வைக்கக்கூடிய குங்குமம் ஆனது ஒரு குங்குமச்சிமிழ் ஒன்றில் வைத்து நாம் பயன்படுத்துவோம். அந்த குங்குமச்சிமிழ் குறையாமல் எப்பொழுதும் நிறைவாக வைத்துக் கொள்வதும் நமக்கு பலவிதமான நன்மைகளை தரும். நல்ல தரமான குங்குமம் தாராளமாக நமது வீட்டில் இருக்க வேண்டும்.
5. சந்தனம்: தற்போதெல்லாம் ரெடிமேடாக சந்தனம் பேஸ்ட் என வந்துவிட்டது. ஆனால் முந்தைய காலங்களில் பயன்படுத்தி வந்த சந்தனமானது ஒரு கல்லின் மீது தேய்த்து அதனை நமது நெற்றியில் வைத்துக் கொள்வோம். அத்தகைய நறுமணம் மிக்க இயற்கையான சந்தனத்தினை நமது வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
6. மஞ்சள் கட்டி: முகத்திற்கு போடக்கூடிய மஞ்சளும் ரெடிமேடாக இப்பொழுது வந்துவிட்டது. ஆனால் மஞ்சள் கட்டி மற்றும் அதனை தேய்த்து பயன்படுத்த கூடிய கல் ஆகியவற்றை நமது குளியல் அறையில் வைத்துக் கொள்வதும் சிறந்த அனுகூலத்தை தரும்.
7. படங்கள்: நீர் ஓடிக்கொண்டிருப்பது போன்று இருக்கக்கூடிய புகைப்படம், கோவில் கோபுரம் கொண்ட புகைப்படம், மயில் அன்னப்பறவை போன்றவற்றின் புகைப்படம், இரண்டு யானைகள் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படம் ஆகியவற்றை நமது வீட்டின் ஹாலில் வைப்பதன் மூலம் பல விதமான அனுகூலங்களை பெற முடியும்.
அதேபோன்று நமது வீட்டின் ஹாலில் அசைந்து கொண்டிருக்கக் கூடிய பலவிதமான அழகு பொருட்களை வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக தஞ்சாவூர் பொம்மை, பெல் சவுண்ட் கொண்ட அழகு பொருளை மாட்டி வைப்பது, அசையக்கூடிய கடிகாரம் இது போன்ற ஏதேனும் ஒரு பொருளை நமது வீட்டின் ஹாலில் வைத்துக் கொள்வது நேர்மறையான ஆற்றல்களை நமக்கு கொடுக்கும்.
8. வெளிச்சம் கொண்ட படுக்கையறை: நமது வீட்டின் படுக்கை அறையானது எப்பொழுதும் கொஞ்சம் வெளிச்சத்துடனேனும் இருக்க வேண்டும். பகலில் சூரியனின் ஒளியால் வெளிச்சம் படுக்கை அறைக்கு கிடைத்துவிடும். ஆனால் இரவில் நைட்லாம்ப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அந்த ஒரு வெளிச்சம் என்பது நமது படுக்கை அறையில் இருந்து கொண்டே இருப்பது அஷ்டதிக்கு யோகத்தை ஏற்படுத்தி தரும்.