ADMK: சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் வெற்றி பெறுவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையை ஏற்றுக் கொள்ளாத இபிஎஸ், கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார்.
இதனால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதவியை விட்டு விலகினார்கள். இது மட்டுமல்லாமல் நேற்று முன் தினம் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 36 பேரை இபிஎஸ் கட்சியை விட்டு நீக்கினார். இதனை தொடர்ந்து செங்கோட்டையன் டிடிவி தினகரன், ஓபிஎஸ், அமித்ஷா போன்ற தலைவர்களை சந்தித்தார்.
ஆனால் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இதனை மறுத்தார். தற்போது செங்கோட்டையன் கட்சியின் அடிமட்ட தொண்டனாக மட்டுமே இருந்து வரும் சூழலில் இதனை ஒப்புக் கொண்டால் அவர் முழுமையாக நீக்கப்படுவார் என்ற பயத்தினால் தான் அவர் இதனை மறுக்கிறார் என்ற செய்தியும் பரவியது.
இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் தோற்று தான் போவார்கள் என்றும், அதனை கருத்தில் கொண்டு தான் செங்கோட்டையன் அவருடைய மன நிலையை மாற்றிக்கொண்டு அமைதியாக இருக்கிறார் என்றும் கூறினார்.