வேண்டுவதை வேண்டியபடி கொடுப்பவர் என்றால் அது முருகப்பெருமான் தான். கேட்கும் வரத்தை அள்ளி அள்ளிக் கொடுப்பவரும் இவர்தான். முருகரை மனதில் நினைத்து நாம் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும். இத்தகைய இந்த முருகப்பெருமானை நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் செய்யவிருக்கிறோம்.
திருமணமான பெண்கள் அனைவருமே நினைக்கக்கூடிய ஒரு விஷயம் இதுதான். சுமங்கலியாக இருக்க வேண்டும் சுமங்கலியாகவே இறக்க வேண்டும் என்பதுதான். கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி பெண்கள் பிரார்த்தனை வைப்பது வழக்கம்.
அந்த காலமாக இருந்தாலும் சரி இந்த காலமாக இருந்தாலும் சரி, கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக்கூடிய மனைவிமார்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே எவ்வளவு தான் நவநாகரீகமாக இந்த உலகம் மாறினாலும் கணவன் மனைவி உறவு, மாங்கல்யம் இதற்கு இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் குறையப்போவது கிடையாது.
உங்களுடைய கணவர் நல்ல ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். சில பேருக்கு மாங்கல்ய தோஷம் இருக்கும். அந்த மாங்கல்ய தோஷத்தை சரி செய்ய ஆன்மீகத்தில் நிறைய பரிகாரங்கள் இருந்தாலும், இந்த ஒரு வழிபாடு உங்களுடைய தோஷத்தை நீக்க எளிய பரிகாரமாக அமையும்.
இந்த வழிபாட்டை செய்பவர்களாக இருந்தாலும் சரி, செய்யாதவர்களாக இருந்தாலும் சரி அனைவரது வீட்டிலுமே முருகருடைய திருவுருவப்படம் வள்ளி தெய்வானையுடன் இருக்க வேண்டும். இது குடும்ப ஒற்றுமைக்கும், கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த திருவுருவப்படம் இல்லை என்றால், முதலில் இதை வாங்கி வைத்து விடுங்கள்.
திங்கட்கிழமையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 திங்கள் கிழமை முருகனின் பாதங்களில் ஒரு மஞ்சள் கயிறை வைத்து விட்டு, குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி , மனப்பூர்வமாக உங்களது கணவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு இரண்டு கற்கண்டை நெய்வேத்தியமாக வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குங்குமத்தை நெற்றியிலும், மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு திங்கள்கிழமை இந்த வழிபாடு முடிந்தவுடன் அந்த மஞ்சள் கயிறை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு சேகரிக்கவும். இதேபோன்று 27 திங்கள் கிழமையும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இடையே மாதவிடாய் நாட்கள் வரும் பொழுது பூஜை செய்ய வேண்டாம். அதைத் தவிர்த்து விட்டு அடுத்த பூஜையில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு 27 திங்கள் கிழமை பூஜை செய்து முடித்தவுடன், 27 மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கும்.
இறுதியாக இந்த 27 திருமாங்கல்ய கயிறையும் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு, பூ, பழம், மஞ்சள், குங்குமம் கூடவே இந்த திருமாங்கல்ய கயிறையும் வைத்து தானமாக கொடுத்து விட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கிவிடும்.
உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இல்லை என்றாலும் கூட, இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது உங்களுடைய கணவரின் ஆயுள் நீடிக்கும். நீங்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வீர்கள். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.