பொறுமையை இழந்த இந்தியர்! அதனால் கிடைத்த சிறை தண்டனை!
சிங்கப்பூரின் ஜுராங் பெஞ்சுரு நகரில் தங்கியிருந்து இந்தியர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். பாலச்சந்திரன் பார்த்திபன் 26 வயதானவர். இவர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஆண்டு மே மாதம் இவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பரிசோதனையின் முடிவுகள் வெளியாகும்வரை ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருக்கும்படி, மருத்துவ ஊழியர்கள் அவரிடம் கூறினார்கள். ஆனால் அவரோ யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறினார். மேலும் பாலச்சந்திரன் பார்த்திபன் இந்தியா திரும்புவதற்காக விமான நிலையத்துக்கு சென்றார். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவருக்கு எந்த விமானத்திலும் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனிடையே பாலச்சந்திரன் பார்த்திபனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.
இதுபற்றி தகவல் அறிந்த ஷாங்காய் விமான நிலைய போலீசார் அவரை பிடித்து, சுகாதார ஊழியர்களிடம் ஒப்படைத்தனர். அதன் காரணமாக அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டார். ஆனாலும் அடுத்த 14 நாட்களுக்கும், அவரை தனிமையில் இருக்க சுகாதார ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆனால் அவரோ மீண்டும் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி இந்தியா வருவதற்காக ஷாங்காய் விமான நிலையம் சென்றுள்ளார். இதையடுத்து கட்டுப்பாடுகளை மீறியதாக கூறி போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை நடந்தது. இதில் பாலச்சந்திரன் பார்த்திபன் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதன் காரணமாக நீதிபதிகள் அவருக்கு 9 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.