ADMK DMK: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை தங்களது வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டன. எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக, இந்த முறை தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, விஜய்யின் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனைகள் போன்றவையாகும். விஜய்யின் வருகை அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில் அதனை மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது அதிமுகவின் பிளவு.
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் இபிஎஸ்கும், ஓபிஎஸ் இடையே சச்சரவு ஏற்பட்டு இவர்கள் இரு அணியாக பிரிந்த போது, ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தெரிவித்து நின்றவர் வைத்தியலிங்கம். இவர் தற்போது வரை ஓபிஎஸ் உடன் இருந்து வரும் நிலையில், கூடிய விரைவில் திமுகவில் இணைய போவதாக பலரும் கூறி வருகின்றனர். இதனை அறிந்த இபிஎஸ், இவரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைப்பாடுகளை செய்து வருகிறாராம். மேலும் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா அடங்கிய நால்வர் அணியும் இவர் திமுகவில் இணையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால் திமுக இவர்களை விட இரு மடங்கு வேகமாக வைத்தியலிங்கத்தை திமுகவில் இணைக்க பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்து வருகிறது.
அதிலும் முக்கியமாக, திமுகவின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வைத்தியலிங்கத்திற்கு நேரடி அழைப்பு விடுத்ததாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்த மனோஜ் பாண்டியன் ஏற்கனவே திமுகவில் இணைந்தது நால்வர் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் வைத்தியலிங்கமும் திமுகவில் இணைந்து விட கூடாது என்பதில் இவர்கள் நால்வரும் கவனமாக உள்ளனர். அதிமுகவுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாகவும், ஓபிஎஸ் செயல்பாடுகள் பிடிக்காததாலும் வைத்தியலிங்கம் திமுகவில் இணையும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

