காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இந்தியாவை சேர்ந்த பலரும் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் நாடெங்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 29 பேர் உயிரிழந்துவிட்டனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கேம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்த கோர சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதில் 23 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். அதோடு பலரும் படுகாயம் அடைந்துள்ளனர்.
தேடுதல் வேட்டையில் ராணுவமும் காவல்துறையும் முழு நேரமாக இறங்கி இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒருபக்கம், ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் நடைபெற்ற பாதுகாப்பு படையின் தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் தேனிலவுக்கு சென்ற அரியானவை சேர்ந்த 26 வயது கடற்படை அதிகாரி கொல்லப்பட்டிருக்கிறார். அப்போது அவரின் மனைவியிடம் ‘உன்னை கொல்ல மாட்டோம். நடந்த சம்பவத்தை மோடியிடம் சொல்’ என தீவிரவாதிகளில் ஒருவர் சொல்லியிருக்கிறார். காட்டுக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவப்படை ஈடுபட்டிருக்கிறது. அடர்ந்த காடு என்பதால் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அதோடு, இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகப்படும் 4 பேரின் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. எனவே, அவர்களை பிடிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அட்டாரி – வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என மத்திய வெளியுத்துறை செயலாளர் அறிவித்திருக்கிறார். மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.