இதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்! ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரிடம் உறுதியளித்த பிரதமர் நரேந்திர மோடி!

Photo of author

By Sakthi

கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைன் மீது அதன் அண்டை நாடான ரஷ்யா திடீரென்று போர் தொடுத்தது 1 மாதத்தை கடந்தும் அங்கு கடுமையான போர் நடைபெற்று வருகிறது.இந்தப் போர் காரணமாக உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை சந்தித்திருக்கிறது.

இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் எந்தவிதமான நடவடிக்கையும் கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், டெல்லி வந்திருக்கின்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஹைதராபாத் இல்லத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உரையாடினார்.இந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் சந்தித்து பேசினார் என்று சொல்லப்படுகிறது.

உக்ரைனுடன் ரஷ்யா நடத்திவரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் போன்றவை தொடர்பாக மோடியிடம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கி கூறியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனில் போரை மிக விரைவில் நிறுத்துமாறு ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். உக்ரைன், ரஷ்யா இடையிலான மோதலுக்கு தீர்வுகாணும் அமைதி முயற்சிகளுக்கு பங்களிக்கவும் இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட இரு தரப்பு உச்சி மாநாட்டின்போது முன்னெடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் தொடர்பாகவும், பிரதமர் மோடியிடம் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் விவாதித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

உக்ரைன், ரஷ்யா மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலையாக இருந்து வருவதுடன் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடந்த வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.