டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி!! பிளே ஆப் சுற்றுக்கு ஒரு படி முன்னேறிய சென்னை அணி!!
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 25 ரன்களும் ருத்ராஜ் கெய்க்வாட் 24 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியில் பந்துவீச்சில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 168 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறந்ங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் டேவிட் வார்னர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.பின்னர் களமிறங்கிய வீரர்கள் சென்னை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேபிடல்ஸ் அணி 140 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக ரேலி ரூசோ 35 ரன்களும், மணீஷ் பாண்டே 27 ரன்களும் எடுத்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மதீஷா பதிரானா 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். டெல்லி அணிக்கு எதிராக வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் நீடிக்கின்றது. இந்த வெற்றியால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு ஒரு படி முன்னேறியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி பெற்றதையடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து முதல் அணியாக வெளியேறியது.