பரபரப்பான சூழ்நிலையில், நீதிமன்ற அனுமதியோடு நேற்றைய தினம் நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை மாநகரத்தில் இருக்கின்ற ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் அந்த கட்சியின் விதிமுறைகளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதோடு அவர் மிக விரைவில் தொண்டர்களின் ஒப்புதலோடு நிரந்தர பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த நிலையில், நேற்று அந்த பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி இன்னும் 4 மாதங்களில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெறும் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திமுகவுடன் இணைந்து அதிமுகவை அழிப்பதற்கு சதித்திட்டம் தீட்டுவதாக தெரிவித்து அந்தக் கட்சியின் பொருளாளராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களை அந்த பொருளாளர் பதவியிலிருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அதிமுகவின் பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருப்பதால் பன்னீர் செல்வத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
நேற்று அதிமுகவின் தலைமை அலுவலகம் பூட்டப்பட்டிருந்த நிலையில், கடப்பாரையை கொண்டு அந்த பூட்டை உடைத்து விட்டு அங்கிருந்து பல ஆவணங்களை பன்னீர்செல்வம் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவர் இவ்வளவு துணிச்சலாக அந்த காரியத்தை செய்ததற்கு பின்னால் ஆளும் கட்சியான திமுக இருக்கிறது என்று அதிமுகவின் தலைவர்கள் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்கள். ஆகவே அவர் திமுகவில் மிக விரைவில் இணைவார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
இன்னொரு புறம் அவர் தனி கட்சி தொடங்கப்போகிறார் என்ற பேச்சும் எழுந்து வருகிறது. அதோடு சசிகலாவுடன் ஒன்றிணைந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவர் அரசியல் செய்வது, அவருக்கு மற்றொரு வழியாகவும் இருக்கிறது.
இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமி உடன் சமரசமாக சென்று காட்சியில் அவர் கொடுக்கக்கூடிய பொறுப்பில் இருந்து கட்சியை வழிநடத்துவது, மற்றொன்று தேசிய கட்சியிலோ அல்லது மாநில கட்சியிலோ இணைவது, உள்ளிட்ட பல வழிமுறைகள் அவருக்காக காத்திருக்கின்றன.
ஆனால் சொந்த கட்சி அலுவலகத்தையே அவர் சூறையாடியதை தொடர்ந்து தற்போது மற்ற கட்சி தலைவர்கள் அனைவரும் இவரை பார்த்து யோசிக்க தொடங்கி விட்டார்கள். எனவே இவரை எந்த கட்சியும் ஏற்றுக் கொள்வதற்காக காத்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே பன்னீர்செல்வம் தனி கட்சி தொடங்குவதையே விரும்புவார் என்று சொல்லப்படுகின்றது. அவருடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கான வேலை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும், தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அடுத்தடுத்த தினங்களில் தமிழகத்தின் அரசியல் களம் பரபரப்பாக காணப்படும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.