மிதியடி என்பது நம்மை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு காலணி. அவ்வாறு தூக்கி செல்லக்கூடிய காலணி நமது உடல் எடையை மட்டும் தூக்குவதில்லை, அதனுடன் சேர்த்து நமது உடம்பில் உள்ள சக்தியையும் சூட்சுமமாக தாங்குகிறது. புவி ஈர்ப்பு விசையின் காரணமாக நமது உடம்பில் உள்ள மொத்த எடையும் பூமியை நோக்கி தான் இறங்கும். அதே போன்று நமது உடலில் உள்ள மொத்த சக்திகளும் கீழே தான் இறங்கும். குறிப்பாக நமது உடம்பில் உள்ள கெட்ட சக்திகளும் பூமியை நோக்கி தான் இறங்கும்.
எனவே ஒரு மனிதருக்கு திருஷ்டி என்பது ஏற்பட்டால் அவருக்கு கால் சம்பந்தமான அடிகளோ, காயங்களோ தான் முதலில் ஏற்படும். நமது உடம்பில் கால் என்பது தான் மிகவும் முக்கியமானது. அந்த காலை தாங்கி பிடிக்கக் கூடியதுதான் அந்த மிதியடி. இந்த மிதியடியானது நமது உடம்பில் உள்ள அனைத்து ஆற்றல்களையும் ஈர்த்து வைத்திருக்கும். குறிப்பாக கெட்ட சக்திகளை ஈர்த்து வைத்திருக்கும்.
இதனால்தான் நமது முன்னோர்கள் நாம் போடக்கூடிய மிதியடியை வீட்டிற்கு வெளியே விட்டு வர வேண்டும் எனவும், வீட்டிற்குள் வரும் பொழுது காலை நன்றாக கழுவி விட்டு உள்ளே வரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
நாம் பல இடங்களுக்கு அந்த மிதியடியை போட்டு சென்றிருப்போம். அங்கு இருக்கக்கூடிய கெட்ட அதிர்வுகள் மற்றும் கெட்ட சக்திகள் அனைத்தும் அந்த மிதியடியில் தான் இறங்கி இருக்கும். இதனால் தான் செருப்பை வீட்டிற்கு வெளியே விட வேண்டும் என கூறுகின்றனர்.
இந்த மிதியடியை வீட்டிற்குள் கொண்டு சென்றால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும். அதாவது மருத்துவம் ரீதியான பிரச்சனைகளும், ஆன்மிகம் ரீதியான பிரச்சனைகளும் ஏற்படும். இத்தகைய மிதியடியை நாம் கோவிலிலோ அல்லது வேறு இடத்திலோ தொலைத்து விட்டால் அது நமக்கு கெட்டதை தருமா என்று கேட்டால், கண்டிப்பாக அது நமக்கு நன்மையை மட்டுமே அளிக்கும்.
ஏனென்றால் நம்மிடம் உள்ள கெட்ட சக்திகளை ஈர்த்து வைத்திருக்கக் கூடிய அந்த காலணியை மாற்றுகிறோம் என்றால் நமக்கு நல்ல சூழ்நிலை மட்டுமே ஏற்படும். ஆனால் நாம் கவனம் இல்லாமலோ அல்லது வேண்டுமென்றோ செருப்பினை தொலைத்தால் அது பலனை தராது. அதாவது நாம் ஒரு இடத்தில் பத்திரமாக செருப்பினை வைத்தும் அது தொலைந்து விட்டது என்றால் மட்டுமே நம்மிடம் உள்ள கெட்ட சக்திகள் அனைத்தும் சென்று விட்டதாக அர்த்தம். அவ்வாறு தொலைந்தால் மட்டுமே நமக்கான பலன் கிடைக்கும்.
அதிலும் கோவிலுக்கு சென்றிருந்தபோது செருப்பு தொலைந்து இருந்தால் அது மிகவும் நல்லது. அவ்வாறு நாம் உபயோகித்துக் கொண்டிருந்த செருப்பு தொலைந்திருந்தால் புதியதாக ஒரு செருப்பினை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். செருப்பினால் கூட பரிகாரம் கிடைக்குமா என்று பலரும் யோசிப்பர். ஆனால் இதுவும் ஒரு சூட்சமமான ரகசியம் தான். எனவே செருப்பு தொலைந்தால் கவலை கொள்ள தேவையில்லை, அது நமது நன்மைக்கே.