பல யுகங்களுக்கு முன்பு தெய்வங்கள் மக்கள் கேட்கும் அனைத்து வரங்களை கொடுத்ததாகவும், மக்களுக்கு காட்சியளித்ததாகவும், அரக்கர்களை அழிக்க பல அவதாரங்களை எடுத்து பூமிக்கு வந்ததாகவும், தனது பக்தர்களை சோதிக்க பல திருவிளையாடல்களை நிகழ்த்தி காட்சி கொடுத்ததாகவும் நாம் கேள்விப்பட்டு இருப்போம்.
ஆனால் நாம் இப்பொழுது வாழ்கின்ற கலியுகத்தில் தெய்வங்களை காண்பது என்பது முடியாத ஒன்று. கோவில்களில் உள்ள சிலைகளை மட்டுமே நாம் கடவுளாக வழிபட்டு வருகிறோம். ஆனால் இதையும் தாண்டி சில மனிதர்களின் உடம்பில் தெய்வங்கள் நேரடியாக இறங்கி சாமி வந்து ஆடி தனது பக்தர்களது குறைகளை போக்க, அருள்வாக்கு சொல்வது என்பது எந்த அளவிற்கு உண்மை? சாதாரண மனிதர்கள் மீது கடவுள் வருவது உண்மையா? அவர்கள் கூறும் அருள்வாக்குகள் உண்மையா? என்பது குறித்து தற்போது காண்போம்.
ஒரு நாணயத்திற்கு எப்படி இரண்டு பக்கங்கள் உள்ளதோ அதே மாதிரி தான் இந்த உலக மக்களும். கடவுளை நம்ப கூடியவர்கள் ஒரு பக்கம், தெய்வபக்தியில் மூழ்கி இருப்பார்கள். கடவுளை நம்பாதவர்கள் இன்னொரு பக்கம், இது அனைத்தும் ஒரு மூடநம்பிக்கை, நரம்பு தளர்ச்சி, அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று நம்பிக்கை இல்லாதவர்களும் இருப்பார்கள்.
பொதுவாக மற்றவர்களுக்கு சாமியை வரவழைக்க இரண்டு முறைகளை பின்பற்றுவார்கள்.
1. வர்ணித்து வரவழைத்தல்-அந்த சாமிக்கு உகந்த பாடல்களைப் பாடி சாமியை வரவழைப்பார்கள்.
2. உடுக்கை அடித்து வரவழைத்தல்-கோவில்களில் பால்குடம், தீர்த்த குடம் போன்ற நிகழ்ச்சிகள் உறுமி மேளம் அடுத்து தான் நடைபெறும். எனவே தான் கோவில்களில் பெரும்பாலானோருக்கு சாமி வருவது என்பது நடைபெறுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த உறுமி மேளத்தின் சத்தம் தான்.
இசை ஆனது ஒரு மனிதனை எளிமையாக ஊடுருவி கொள்ளும் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சத்தத்தின் பொழுது உணர்ச்சிவசப்பட்டு, தன்னை அறியாமல் தான் பலரும் ஆடுகின்றனர். எனவே இந்த சப்தத்தின் பொழுது ஒன்று காதை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது தனது கவனத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டும்.
இவை அல்லாமல் தெய்வத்தின் மீது கொண்ட பக்தியால் அந்த உறுமி மேளத்தை நாம் ஆழ்ந்து கேட்கும் பொழுது, அந்த இசை நம்மை ஆட்டிப்படைத்து விடும். இதுதான் இசையின் வலிமையும் ஆகும். இசையிலிருந்து வரும் ஒலியின் அதிர்வெண்ணும், சாமி வந்து ஆட கூடியவர்களின் ஆழ்மனதில் இருக்கக்கூடிய அதிர்வெண்ணும் ஒன்று சேரும்பொழுது அவர்கள் தன்னை மறந்து ஆழ்மனதின் வெளிப்பாடுகளை அப்படியே வெளிப்படுத்துவார்கள்.
இசையின் வேகம் அதிகமாகும் பொழுது அவர்களது வேகமும் அதிகமாகும். அதேபோன்று இசையின் வேகம் குறையும்பொழுது அவர்களது வேகமும் குறையும். அந்த நேரத்தில் அவர்கள் கூறக்கூடிய அருள் வாக்குகள் அனைத்தும் அவர்களது ஆழ்மனதிலிருந்து கூறக் கூடியவைகள்.
அந்த இடத்தில் கண்களை மூடி அவர்களது ஆழ் மனதில் இருக்கக்கூடிய அதீத கற்பனை மற்றும் அதீத கடவுள் நம்பிக்கை ஆகியவற்றின் வெளிப்பாடாக தான் சாமி வந்து அருள்வாக்கு கூறுவது. சாமி ஆடும் மனிதர்கள் தன்னை கடவுளின் மறு உருவமாகவே கற்பனை செய்து வைத்துக் கொள்கின்றனர்.
சிலர் வசியம், மாந்திரீகம், ஒருவரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், மற்றவர்களுக்கு கெட்டதை செய்யவும் நிறைய பேர் சாமி வந்து அருள்வாக்கு சொல்வதாக பலரை ஏமாற்றி வருகின்றனர். யார் ஒருவர் நல்லதே செய்கிறார்களோ அவர்களுக்கு நல்லதே நடக்கும். அவர்கள் கூறும் அருள்வாக்கும், ஜாதகமும் சரியாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி அவர்கள் கூறும் பொழுது அவர்களது வாக்கு பலிக்கும்.
ஆன்மீக நாட்டமும், முறையான இறைவழிபாடும், தியானம், தவம் இருப்பவர்களுக்கும் உண்மையாகவே சாமி வந்து அருள் வாக்கு கூறும் பொழுது அவை பலிக்கும். இவ்வாறு இல்லாதவர்கள் கூறக்கூடிய வாக்கு பலிக்காது.