
ADMK DMK: தமிழகத்தில் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் தான். தற்போது மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளது தவெக. இதற்கு பிறகு சீமானின் நாம் தமிழர் கட்சி. இந்த 4 கட்சிகளுக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி நிலவும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவும், திமுகவும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களையும் வகுத்து வருகின்றன.
இன்று மாமல்லபுரத்தில் திமுக சார்பில் தமிழ்நாடு தலை குனியாது என்ற என்ற பிரச்சாரம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பேசிய முதல்வர், 6 முறை ஆட்சி அமைத்த திமுக, இந்த சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று 7 வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டுமென்று கூறினார். திமுக அரசின் திட்டங்களும், சாதனைகளும், மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் சேர்ந்திருக்கிறது.
நமது தொடர் வெற்றிகளை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உள்ளன என்று கூறிய அவர், தலை நிமிர்ந்து நிற்கும் நம் ஆட்சியா? டெல்லிக்கு வளைந்து கொடுக்கும் அடிமைகளின் ஆட்சியா என்பதை தேர்தல் தீர்மானிக்கும் என்று அதிமுகவையும், பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார். இப்போதெல்லாம் திமுக தலைமை விஜய், அதிமுக, பாஜக போன்ற கட்சிகளை நேரடியாக விமர்சிக்காததை பார்க்க முடிகிறது. இதற்கு முன் விஜய்யை புதிய எதிரிகள் என்று மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலினை பலரும் கிண்டலடித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக பற்றிய ஸ்டாலினின் மறைமுக கருத்து மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
