TVK DMDK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணி மட்டுமே தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு என வலியுறுத்தி வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் பிரியும் நிலையில் உள்ளது.
இரண்டாக பிரிந்துள்ள பாமகவில், அன்புமணி அதிமுக பக்கமும், ராமதாஸ் திமுக பக்கமும் செல்ல வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். தேமுதிகவும், அதிமுக, திமுக என இரண்டு பக்கமும் கதவுகளை திறந்து வைத்திருக்கிறது என்றும், எந்த கட்சி அதிக தொகுதிகளை தருகிறதோ அந்த கட்சியுடன் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படும் என்று தகவல் வெளிவந்தது. இந்நிலையில் புதிய திருப்பமாக, தேமுதிக, தவெகஉடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த பேச்சு வார்த்தையில், தேமுதிகவிற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்கப்படும் என்றும், மேலும் சில கோரிக்கைகளை பிரேமலதா முன் வைத்துள்ளதால், அதனை பரிசீலிக்கும் பணியில் தவெக மும்முரமாக உள்ளதாகவும் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல், பிரேமலதாவிற்கு, துணை முதல்வர் பதவியும் வழங்க இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.
விஜய் தனது முதல் மாநாட்டிலேயே, விஜயகாந்தை முன்னிறுத்தி பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளார். எம்ஜிஆர் போன்ற குணமுடைய மனிதருடன் பழகும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது என்று கூறி பெருமிதம் அடைந்தார். அதனால் அப்போதே, தவெக-தேமுதிக கூட்டணி உருவாகுமென்று கூறப்பட்டது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் இவ்வாறான தகவல் பரவி வருகிறது.

