ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் அதிமுகவில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வருவது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. அதிமுக தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுவதை விட உட்கட்சி பிரச்சனையில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்த முன்னாள் தலைவர்களான செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளனர்.
நேற்று பசும்பொன்னில் நடந்த விழாவில் நால்வரும் ஒருங்கே வந்து முத்துராமலிங்க தேவருக்கு மலர் தூவி மரியாதையை செலுத்தியது, பின்னர் ஒன்றாக பேட்டியளித்தது போன்ற நிகழ்வுகள் தற்போது வரை அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன் சூடு கூட தணியாத நேரத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் என்ற கருத்து பரவி வருகிறது.
மேலும் தற்போது அதிமுக தலைமைக்கு எதிராக உள்ளவர்களுடன் கட்சியின் அடிமட்ட தொண்டனான செங்கோட்டையன் பயணித்து வருவதால் அவரை கட்சியிலிருந்து அடியோடு நீக்குமாறு, இபிஎஸ்யிடம் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனால் செங்கோட்டையன் இடத்தை ஆர், பி உதயகுமார் பிடிக்க முயல்கிறார் என்ற சந்தேகமும், இபிஎஸ்க்கு தான் நெருக்கமானவர் என்பதை காட்டி கொள்வதற்காகவும் இவர் இவ்வாறு செய்து வருகிறார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

