TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் யாரும் எதிர் பார்த்திடாத அளவு மக்களின் ஆதரவை பெற்றது. தவெக 2026 தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே அந்த கட்சி தேர்தலில் எந்த இடத்தை பிடிக்கும் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திராவிட கட்சிகளுக்கு இணையாக விஜய் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அந்த பிரச்சாரத்திற்கு யாரும் எதிர் பார்த்திராத அளவு மக்கள் கூட்டம் கூடியது. இதுவே தவெகவின் முதல் வெற்றியாக பார்க்கப்பட்டது. ஆனால் இதனை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்த நிகழ்வு தான் கரூர் சம்பவம்.
கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியது. இது தவெக அறியாமையால் நிகழ்ந்தது என பலரும் கூறி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இது உண்மை என விஜய் உணர்ந்தார். தவெகவில் அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்களோ, மூத்த நிர்வாகிகளோ இல்லை. தலைவர் உட்பட தொண்டர்கள் வரை அனைவரும் அரசியலுக்கு புதிது. இதனால் தவெகவிற்கு அரசியல் அனுபவம் வாய்ந்த நபர்கள் தேவைப்பட்டது.
அப்போது தான் அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தவெகவிற்கு மிகவும் சாதகமாக அமைந்துவிட்டது. இந்நிலையில் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். இவர் விஜய் கட்சியில் இணைந்தது விஜய்க்கு பக்க பலமாக இருக்கும் என்ற கருத்து வலுப்பெறுகிறது. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த செங்கோட்டையன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்களுக்கே திட்டம் வகுத்து கொடுத்தவர்.
அப்படி இருக்க விஜய்க்கு பிரச்சாரம் செய்யும் இடத்தில் தான் சிக்கல் உள்ளது. அதனை வழி நடத்த சரியான தலைமை இல்லை. இந்நிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் விஜய்க்கு சிறந்த வியூக வகுப்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தனது அடுத்த கட்ட சுற்று பயணத்தை சேலத்தில் இருந்து ஆரம்பிக்க போவதாக அறிவித்த நிலையில், செங்கோட்டையன் அதனை மாற்றியுள்ளார் என்று தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. கோபியில் செங்கோட்டையன் வலுவாக இருப்பதால் அவர் தவெகவில் இணைந்த கையுடன் கோபிச்செட்டிபாளையத்தில் சுற்று பயணத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

