ADMK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட கரூர் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்திற்கு பல்வேறு கட்சியை சேர்ந்த தலைவர்களும் நிவாரணம் அளித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சமும் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
பிரதமர் மோடியும், உயிரிழந்தவர்களுக்கு 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்குவதாக கூறியிருந்தார். மேலும் தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அப்போது கரூர் மருத்துவமனையில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வந்தனர். ஆனால் அதிமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கபடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக ஏன் இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. பிரதான எதிர்கட்சியாக திகழும் அதிமுக நிவாரணம் வழங்கி இருக்கு வேண்டும் தானே என்று கேள்வி எழுப்பினார். அதிமுகவிடம் பணம் இல்லையா, இறந்தவர்களுக்கு 10 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு டிராமா செய்து கொண்டிருக்கிறீர்கள்.
இந்த இடத்தில் அம்மா இருந்திருந்தால் கண்டிப்பாக நிவாரணம் வழங்கி இருப்பார் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட போது கூட அதிமுக சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டது. கரூரில் உயிரிழந்தவர்களை பார்த்தால் மனிதர்களாக தெரியவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.