
ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மத காலமே இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தலை கருத்தில் கொண்டு இரண்டு கட்சிகளும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகாரில் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த பாஜக அடுத்த கட்டமாக தமிழகத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது.
இந்த கூட்டணி உறுதியானத்திலிருந்தே அதிமுகவை பாஜக ஆட்டி வைக்கிறது, பாஜகவிற்கு அடிமையாக அதிமுக இருக்கிறது என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனை எதிர்க்கட்சிகள் பொது மேடையிலேயே விமர்சித்து வந்தன. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் டெல்லி செய்வது இந்த கூற்றை உறுதிப்படுத்துவது போல அமைந்திருந்தது. மேலும் இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், கூட்டணி ஆட்சி தான் நடக்கும், தமிழகத்தில் பாஜகவின் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்று பலரும் கூறி வந்தனர்.
இந்நிலையில் கூட்டணி ஆட்சி, பாஜக ஆதிக்கம் போன்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை. இது குறித்து பேசிய அவர், கூட்டணி என்பது வேறு, ஆட்சியை யார் நடத்துவது என்பது வேறு ஆட்சியை அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் நடத்தும். அதில் மற்ற கட்சிகள் பங்கு பெறுவதற்கு இடமே கிடையாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு பாஜகவும் ஆட்சியில் பங்கு பெறும் என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
