DMK TVK CONGRESS: மாநில அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். மிகப்பெரிய திராவிட கட்சியான திமுகவை தவெகவின் அரசியல் எதிரி என்று விஜய் கூறியது அனைவரது மத்தியிலும் சிரிப்பை வர வழைத்தது. விஜய் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டலுக்கு ஆளானாலும் அவரது கட்சி அபார வளர்ச்சி அடைந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.
தேர்தல் என்றாலே அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி என்று இருந்த நிலை மாறி, தற்போது, அதிமுக, திமுக, தவெக, நாதக என அரசியல் களம் மாறி விட்டது. இந்நிலையில் தவெகவின் கூட்டணி முடிவு ஜனவரியில் தான் அறிவிக்கப்படும் என்று விஜய் தீர்க்கமாக உள்ளார். இதுவரை விஜய் பாஜக உடனும் கூட்டணி இல்லை, தற்சமயம் வரை அதிமுக உடனும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. இதனால் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இது திமுகவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் பீகார் தேர்தலில் தோல்வியுற்ற காங்கிரஸுக்கு தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளும், ஆட்சியில் பங்கையும் ஒதுக்கினால் காங்கிரசை தவெக பக்கம் போக விடாமல் தடுக்க முடியும் என்று திமுக தலைமை யோசித்திருக்கிறது. இப்படி நடந்தால் தவெக தனித்து நின்று தேர்தலில் தோற்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று திமுக நினைக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்காத விஜய் காங்கிரசை மட்டுமே நம்பி இருந்த சமயத்தில் திமுகவின் இந்த முடிவு விஜய்யின் அரசியல் பயணத்தை அடியோடு ஒழிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

