ஆகாயத்தில் அதிசய நிகழ்வாக பார்க்கப்படும் இன்றைய தினம் மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்கு மேலே வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் இணைந்து காட்சி தரும், 397 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது நடைபெறும் இந்த நிகழ்வை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள்.
இது குறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர், எஸ். சௌந்தரராஜன் தெரிவித்ததாவது, பூமியை ஒத்த கிரகம் என்று சொல்லப்படும் செவ்வாய், கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் 31ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வந்தது. அதேபோல வியாழன், மற்றும் சனி, கோள்கள் இன்றைய தினம் பூமிக்கு அருகில் வரவிருக்கின்றன.
வாயுக்கோள்களான வியாழனும் , சனியும், தொடர்ச்சியாக சென்ற மூன்று மாதங்களாகவே வானிலே மேற்கு திசையில் காட்சி அளித்து வருகின்றன. இப்பொழுது இந்த இரண்டு கோள்களும் நாளுக்குநாள் நெருங்கி கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக இன்றைய தினம் மாலை சூரியன் மறைந்த பின்னர் சுமார் 5-45 மணி அளவில் இந்த இரு கோள்களும் மேற்கு திசை வானில் ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கின்றன என்று தெரிவித்திருக்கின்றார்.
அதோடு சனி, மற்றும் வியாழன், கோள்கள் 20 வருடங்களுக்கு ஒரு முறை அருகருகே நெருங்கி வரும் என்று தெரிவித்தாலும், இதே போல ஒன்றாக காட்சியளித்தது கடந்த 1623 ஆம் வருடம் அதாவது, 397 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிகழ்வு நிகழ்ந்து இருக்கின்றது. அவ்வாறு இருக்கும் போது இப்போதைய நிகழ்வுக்கு பிறகு மீண்டும் வருகின்ற 2080ஆம் வருடம் மார்ச் மாதம் 15ஆம் தேதி தான் வியாழன், மற்றும் சனி, ஆகிய கோள்கள் ஒன்றாக காட்சியளிக்கும்.
இதற்கு முன்னதாக, கடந்த 2000வது வருடம் மே மாதம் 28ஆம் நாள் இந்த இரு கோள்களும் அருகருகே வந்தன. ஆனால் அப்பொழுது பகல் வானில் சூரியன் அருகில் இருந்து காட்சி அளித்ததால், மக்களால் அந்த நிகழ்வை காண இயலவில்லை. இப்பொழுது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அவற்றை ஒன்றாக இன்றைய தினம் மக்கள் கண்டு ரசிக்கலாம் அடுத்ததாக இந்த இரு கோள்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வானது, 2040 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நடக்கும், அதன்பின்னர் 2060 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி நடக்கும் என்று தெரிவித்து இருக்கின்றார்.