அட்சய திருதியை என்கின்ற நாள் எப்பொழுது வரும் என்று காத்துக்கொண்டு இருக்கும் காலமாக இன்றைய காலம் மாறிவிட்டது. இந்த அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாளாகும். இன்றைய நாளில் மகாலட்சுமியின் அருள் பார்வை பட்டு ஒரு சாதாரண ஏழைக்கு தங்க நெல்லிக்கனி மழையை அருளிய நாளாகும்.
மேலும் இந்த நாளில் தான் சிவபெருமானுக்கு அம்பாள் அன்னபூரணியின் வடிவம் கொண்டு தானம் இட்ட நாளாகும். அட்சய பாத்திரம் என்பதை பாண்டவர்கள் பெற்ற நாளும் இந்த நாள்தான். இதேபோன்று அட்சய திருதியை குறித்து பலவிதமான கருத்துக்கள் உள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை இந்த வருடம் 2025 ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. அட்சய திருதியை என்றாலே அனைவரது எண்ணத்திலும் எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு கிராம் குண்டுமணி ஆவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
இந்த அட்சய திருதியை நாளானது தங்கம் வாங்குவதற்கு மட்டும் தான் உகந்த நாள் என்று கிடையாது. அதாவது தானம் செய்வதற்கும் உகந்த நாளாகும். இன்றைய நாளில் தங்கம், வெள்ளி இது போன்ற உயர்ந்த பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டால் மென்மேலும் நம்மிடம் தங்கம் சேரும் என்று அனைவரும் எண்ணி வருகின்றனர்.
ஆனால் இந்த நாளானது தானம் செய்வதற்கும் உகந்த நாளாகும். அதாவது இந்த நாளில் தானம் செய்தால் நம்மிடம் உள்ள செல்வம் மென்மேலும் பெருகும் என்று அர்த்தம். இது வாங்கி வைக்கக்கூடிய நாள் கிடையாது, கொடுக்கக்கூடிய நாளாகும்.
பெண்ணின் திருமணத்திற்காக அல்லது பையனின் திருமணத்திற்காக என்று தங்கம் வாங்க நினைப்பவர்கள் இந்த நாளில் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த நாளில் கண்டிப்பாக தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதேபோன்று இந்த நாளில் கட்டாயம் வாங்க வேண்டிய பொருட்கள் என்று சில உள்ளன.
அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கு உகந்த நாள் என்பதால், லட்சுமி தேவிக்கு உகந்த சில பொருட்களை கண்டிப்பாக இந்த நாட்களில் வாங்க வேண்டும். தங்கமும் மகாலட்சுமிக்கு உகந்த பொருள் தான். ஆனால் தங்கத்தை விட மகாலட்சுமிக்கு பிடித்த சில உயர்ந்த பொருட்களும் உள்ளன.
1. உப்பு:
மகாலட்சுமி தாயாரின் பிறந்த வீட்டு சொத்து என்றால் அது உப்பு தான். பார் கடலில் பிறந்த மகாலட்சுமிக்கு உப்பு தான் மிகவும் பிடித்தமான பொருள். நமது வீட்டில் எப்பொழுதும் உப்பை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய இந்த கல் உப்பை, அட்சய திருதியை அன்று நாம் நமது வீட்டில் வாங்கி வைக்க வேண்டும்.
2. மஞ்சள்:
இரண்டாவது மங்களகரமான பொருள் என்றால் மஞ்சள். அட்சய திருதியை நாளில் இந்த பொருட்களை வாங்க முடியும் என்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். முடியாதவர்கள் முந்தைய நாளில் வாங்கி வைத்துக் கொண்டு, சரியான நேரத்தில் அதனை பூஜை அறையில் வைக்க வேண்டும்.
அட்சய திருதியை அன்று கண்டிப்பாக நாம் வாங்க வேண்டிய மங்களகரமான பொருட்கள் என்றால் கல் உப்பு மற்றும் மஞ்சள். இதை தவிர்த்து அன்றைய நாளில் அரிசி, பருப்பு, கோதுமை மற்றும் துணி போன்றவற்றை மற்றவர்களுக்கு தானமாக வழங்கலாம். அட்சய திருதியை நாளில் தானம் கொடுத்தால் நம்மிடம் உள்ள செல்வம் பெருகும்.
தானங்களில் மிகவும் உயர்ந்த தானம் என்றால் அன்னதானம். எனவே இந்த நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு அன்னதானம் கொடுக்கலாம். முடியாதவர்கள் ஏதேனும் ஒரு இரண்டு உயிரினங்களுக்காவது அன்னதானம் செய்யலாம். அதாவது மனிதர்கள், காகம், குருவி, நாய் இதுபோன்ற எந்த உயிரினங்களுக்கு வேண்டுமானாலும் தானம் கொடுக்கலாம்.
மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக அவருக்கு மிகவும் பிடித்த கற்கண்டு சாதம் அல்லது பால் பாயாசம் செய்து வைக்கலாம். முடியாதவர்கள் இரண்டு கற்கண்டு மட்டும் வைத்தால் போதும். அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெள்ளை நிற மலர்கள் அல்லது செந்தாமரை வைக்கலாம். முடியாதவர்கள் எந்த பூக்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
உங்களால் எப்பொழுது முடியுமோ, அதாவது காலை அல்லது மாலை எந்த நேரத்தில் கடவுளை வழிபட முடியுமோ அந்த நேரத்தில் வழிபட்டுக் கொள்ளலாம். இவ்வாறு மகாலட்சுமி தாயாரை வணங்கிய பின்னர் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரலாம், தானம் செய்ய நினைப்பவர்கள் தானம் செய்யலாம்.