ADMK TVK: தமிழக அரசியலில் புதிய புயலை கிழப்பியுள்ள நிகழ்வு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். இதுவரை அதிமுக-திமுக என்று இருந்த தேர்தல் களம் தற்போது தவெக என்ற பெயரை உச்சரிக்க தொடங்கியுள்ளது. இதனால் விஜய் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது. கட்சி ஆரம்பித்த, தனது முதல் மாநாட்டிலேயே தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று கூறிய விஜய் இப்போது வரை அந்த முடிவில் தெளிவாக உள்ளார்.
மேலும் கொள்கை எதிரி பாஜக என்றும் கூறியிருந்தார். இது மட்டுமல்லாமல், தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்றும் தெளிவுப்படுத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக கரூரில் நடந்த சம்பவம் விஜய்யின் நம்பிக்கையை ஒட்டு மொத்தமாக முடக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனை பயன்படுத்த நினைத்த அதிமுக விஜய்யை கூட்டணியில் இழுத்து விடலாம் என்று திட்டம் தீட்டியது. இதற்காக சட்டசபையில் விஜய்யின் குரலாக ஒலித்தது, செய்தியாளர்களிடம் தவெகவிற்கு ஆதரவாக பேசியது போன்ற பல்வேறு முயற்சிகளை செய்தது.
இதன் காரணமாக விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியிலிருந்து இறங்கி, இபிஎஸ் தலைமையிலான கூட்டணிக்கு சம்மதம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதனை முறியடிக்கும் விதமாக நேற்று நடந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் என்றும், விஜய் தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் முழு அதிகாரமும் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனால் இபிஎஸ் மிகவும் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. இந்த தேர்தலில் அதிமுக எதிர்கட்சி அந்தஸ்த்தையாவது பெற வேண்டுமென்றால் அதற்கு விஜய் கூட்டணி அவசியம். இதனை உணர்ந்த இபிஎஸ், விஜய் நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்ற தகவல் பரவி வருகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், விஜய் தலைமையில் அதிமுக கூட்டணி அமைத்து அதில், முதல்வர் வேட்பாளராக விஜய் நின்றால் அதிமுகவுக்கு மிக பெரிய அவமானத்தை தேடி தரும் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

