கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கு! தாளாளர் உட்பட 5 பேருக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு!

Photo of author

By Sakthi

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரிலிருக்கின்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில், மரணத்தில் மர்மமிருப்பதாக அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வழங்கிய புகாரினடிப்படையில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா, உள்ளிட்ட 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையிலடைத்தனர்.

அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது, மேலும் இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரும் தங்களுக்கு ஜாமின் வேண்டும் என்று கேட்டு தனித்தனியாக விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர், இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேரின் காவல் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது. இதனால் இந்த வழக்கு நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு விசாரணைக்கு வந்தது.

காணொளி காட்சியின் மூலமாக விசாரித்த நீதிபதி புஷ்பரணி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி வரையில் அவர்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் என்றும், சொல்லப்படுகிறது.