கமல்ஹாசனுக்கு மனநல சிகிச்சை தேவை: தரம் தாழ்ந்த விமர்சனத்தை முன்வைக்கிறாரா அண்ணாமலை?
தமிழக அரசியலில், இருவேறு கட்சியை சேர்ந்தவர்கள் மாறிமாறி விமர்சிக்க வேண்டும் என்றால், கிண்டலாக “மூளை இல்லாதவர், முட்டாள்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது உண்டு.அதுபோலத்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அண்மையில் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன், “இந்தியாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் தலைநகர் நாக்பூர் ஆகிவிடும்” என்று கூறியிருந்தார்.இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “மனநல மருத்துவமனைக்கு சென்று மூளையை சரிபார்க்க வேண்டும். வடது மற்றும் இடது பக்கம் மூளை சரியாக செயல்படுகிறதா? சரியாக சாப்பிடுகிறார்களா? என்று மருத்துமனையில் சோதனை செய்ய வேண்டும்.நல்ல மருத்துவ ஆலோசனை கமல்ஹாசன் அய்யாவுக்கு கொடுக்க வேண்டும்” என்று கடுமையாக சாடியிருந்தார்.
அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தன்னை பற்றி எதிர் கருத்து கூறுபவர்களை, அண்ணாமலை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
அதேசமயம் பாஜக தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் எழுந்துள்ளது.ஒரு மதத்திற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசனுக்கு அண்ணாமலை சரியான பதிலடி கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.என்ன இருந்தாலும், மனநல சிகிச்சை தேவை என்று சொல்வதெல்லாம் சரியான எதிர்விமர்சனம் கிடையாது என்று கருத்துக்கள் உலா வருகின்றன.எக்ஸ் தளத்தில்கூட மூளையில்லாத அண்ணாமலை என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகியுள்ளது.