கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மூன்றாவது அணி அமையும் எனவும், திமுகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறார் எனவும், கூறப்பட்டு வந்த நிலையில், மக்கள் நீதி மையத்தின் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் உரையாற்றிய கமல்ஹாசன் நம் கூட்டணி மக்களுடன் என்று பேசி இருக்கின்றார்.
தன்னுடைய நண்பரான ரஜினியுடன் கூட்டணி வைக்க வெகுவாக விரும்பியிருக்கிறார் கமல்ஹாசன்.அதனை பல நேரங்களில் பல இடங்களில் சூசகமாக தெரிவித்து வந்த கமல் நேரடியாகவே ஒரே மேடையில் அமர்ந்திருந்த போது கூறியும் பார்த்திருக்கிறார். துணிந்து வாங்க ரஜினி” என்று கூப்பிட்டு பார்த்தார்.
ஆனால் இப்போது வரையில் ரஜினி அமைதியாகவே இருப்பதாலும் அப்படியே அவர் கட்சி தொடங்கினாலும் தன்னுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பதை முழுமையாகத் தெரிந்து கொண்ட கமல்ஹாசன், யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை ஊழலை எதிர்த்துப் தான் நாம் நிற்க போகிறோம் என்று சமீபத்தில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருக்கின்றார்.
அதன் பின்பும் கமல்ஹாசன் பல கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில், நம் கூட்டணி மக்களுடன் தான் என்று அறிவித்திருக்கிறார்.கமல்ஹாசன் இந்த செயல் விஜயகாந்த் ஆயுதத்தை கமல்ஹாசன் எடுத்துக் கொண்டாரோ என்பது போல் இருக்கின்றது.
ஆம் கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் மக்களுடன் தான் கூட்டணி என்று தான் சொல்லி வந்தார். முதல் தேர்தலிலும் அப்படியேதான் போட்டியிட்டார். ஆனாலும் அடுத்து வந்த தேர்தலில் மக்களுடன் தான் கூட்டணி என்று கடைசி வரை கூறி வந்தார் கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார்.
அதற்கு தன்னை கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும், ஏற்றுக் கொண்ட மக்கள் நல கூட்டணியில் இணைந்தார்.அப்போது மக்களோடு தான் கூட்டணி என்று சொல்லி வந்தேன் அதே போல இதுவும் மக்கள் நல கூட்டணி என்ற காரணத்தால், இணைந்து இருக்கிறேன் என்று தெரிவித்தார் விஜயகாந்த்.
மக்களோடு மட்டும்தான் கூட்டணி என்ற கொள்கையில் உறுதியாக இருப்பாரா? கமல் அல்லது விஜயகாந்த் போல கடைசி நேரத்தில் கூட்டணி அமைப்பரா என்பது தெரியவர இன்னும் சில மாதங்களே இருக்கிறது.