DMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டிருக்கும் சூழலில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றி, இக்கட்சி 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். விஜய் தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறிய நிலையில் தற்போது வரை அதில் நிலையாக உள்ளார். மேலும் தவெகவின் அனைத்து மக்கள் சந்திப்பிலும் திமுகவை கடுமையாக சாடி வந்தார். கரூர் சம்பவத்திற்கு பின், ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட திமுகவை தீய சக்தி என்று விஜய் கூறியது பரவலாக பேசப்பட்டது.
இவ்வாறான நிலையில் திமுக எம்பி கனிமொழி இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்யும் அவரை செல்போனில் அழைத்து வாழ்த்து கூறியது இன்று அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியிருக்கும் நிலையில், கனிமொழிக்கு இவர் வாழ்த்து கூறியிருப்பது பேசு பொருளானது. இதன் காரணமாக கனிமொழி தவெகவில் இணைய போகிறார் என்று பலரும் கூறுகின்றனர். இந்த சமயத்தில் மேலும் ஒரு முக்கிய தகவலும் கசிந்துள்ளது.
கனிமொழி தவெகவில் இணைந்தால் அவருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்பை விஜய் வழங்கவுள்ளதாகவும், இதனால் கனிமொழி தவெகவில் சேர சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தவெகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா திமுகவின் சிட்டிங் அமைச்சர்களும் எங்கள் கட்சில் இணைய இருக்கிறார்கள் என்று கூறியது இதனை உறுதிப்படுதியுள்ளது. ஏற்கனவே இளைஞர்களின் வாக்குகளை தம் கையில் வைத்திருக்கும் விஜய், அடுத்ததாக கனிமொழி மூலம் பெண்களின் வாக்குகளை குறி வைக்கிறார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.