ரோந்து செல்வதற்கு படகில்லை! பரிதாபத்தில் புதுச்சேரி கடலோர காவல் படையினர்!

Photo of author

By Sakthi

காரைக்கால் மாவட்டத்தில் ரோந்து படகுகள் இல்லாத காரணத்தால், கடலோர காவல் படையை சேர்ந்தவர்கள் மீனவர்கள் படகில் ரோந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலோர பகுதி இருக்கிறது.

இதில் காரைக்கால் மேடு ,கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மண்டபத்தூண் போன்ற 11 மீனவ கிராமங்களை சார்ந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகிறார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கடலோர காவல் படைக்கு கடலோர காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 2 அதிநவீன ரோந்து படகுகள் உள்ளிட்டவற்றை புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கியது.

படகுகளை பராமரிப்பு செய்வதற்காக உரிய தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லாத காரணத்தால், பராமரிப்பின்றி 2 ரோந்து படகுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக பழுதாகி நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இதனால் கடல் வழி குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், தடுப்பதற்கும், இயலாமல் கடலோர காவல்படை காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பக்கத்து மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் கடல் வழியாக கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழல் காரணமாக, புதுவை மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளை தீவிரமாக கண்காணிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதேசமயம் காரைக்கால் மாவட்டத்தில் கண்காணிப்பதற்கான போதிய ரோந்து படகு உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாத காரணத்தால், மீனவ கிராமங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகிருக்கிறது. அதோடு மீனவர்கள் படகை வாங்கிக்கொண்டு 15 நாட்களுக்கு ஒருமுறை ரோந்து செல்லும் அவலநிலை ஆரம்பமாகியிருக்கிறது.

இதுதொடர்பாக காவல் துறையினரிடம் கேள்வி எழுப்பியபோது ரோந்து படகு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பொழுது நீக்கிய நிறுவனத்திற்கு 16 லட்சம் ரூபாய் பாக்கியை தற்போது வரையில் அரசு கொடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், மீண்டும் பழுதாகியிருக்கிறது ஆகவே இதனை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதுவரையில் மீனவர்களின் படகுகளில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.