VK BJP: கரூரில் நடைபெற்ற தவெகவின் பரப்புரையில் ஏற்பட்ட இழப்புகள் நாட்டையே உலுக்கியுள்ளது. இதில் 41 பேர் உயிரிழந்ததுடன், 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்காமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் சம்பவம் நடந்த 3 நாட்களுக்கு பிறகு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக அவர் மீது கண்டனங்கள் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட குடும்பகளிடம் வீடியோ கால் மூலம் பேசிய அவர், அவர்களை விரைவில் நேரில் சந்திப்பேன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், அவர்களை சந்திப்பதற்க்காக தமிழக டிஜிபியிடம் பாதுகாப்பு மனு ஒன்று தவெக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், விஜய் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும் போது, அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், திருச்சி விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் இருக்கும் இடத்திற்கு மீடியாக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தவெகவின் பாதுகாப்பு மனு குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, கரூரில் என்ன பூதாகரமான மக்களா இருக்கிறார்கள், விஜய் கரூர் வருவதற்கு போலீசின் அனுமதி எதற்கு? கரூருக்கு யார் வேண்டுமானாலும் தைரியமாக செல்லலாம், இவ்வளவு பாதுகாப்பு அவசியமில்லை என்று தெரிவித்தார். மேலும் நானும் கரூரை சேர்ந்தவன் தான், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.