தமிழகத்தில் பிரச்சாரத்தை தவிர்த்த குஷ்பு.. ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன்??
மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து நான்காம் கட்ட தேர்தல் தெலுங்கானாவில் உள்ள 17 தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன்படி நான்காம் கட்ட தேர்தல் மே 13ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்காக ஹைதராபாத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி செகந்திராபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டிக்கு ஆதரவாக நடிகை குஷ்பு தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதுபெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் முன்னதாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்து வந்த குஷ்பு உடல்நிலை காரணமாக பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தினார். இதுகுறித்து அவர், “சில நேரங்களில், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். இன்று நான் அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறேன்.
நரேந்திர மோடி வெற்றிக்காக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் நான் மூழ்கிவிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் உடல்நிலை காரணமாக பிரச்சாரத்தை நிறுத்த, வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எலும்பின் காயம் காரணமாக பிரச்சாரத்தை நிறுத்துகிறேன். விரைவில் குணமடைய உங்கள் ஆதரவும் நல்லெண்ணமும் தேவை.
2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னை துன்புறுத்தி வருகிறது. தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை. பிரச்சாரம் செய்ய வேண்டாமென எனது மருத்துவக் குழு என்னை எச்சரித்துள்ளது.
இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடியின் உண்மையான அர்ப்பணிப்புள்ள பாஜக போர்வீரன் என்ற முறையில் எனது மருத்துவரின் அறிவுரைக்கு எதிராக, வலி மற்றும் வேதனை இருந்தபோதிலும், என்னால் முடிந்தவரை பிரச்சாரம் செய்தேன். ஆனால் என் உடல்நிலை மோசமடைந்து விட்டது” என பக்கம் பக்கமாக வசனம் பேசி இருந்தார். இப்படி உள்ள சூழலில் ஆந்திராவில் மட்டும் பிரச்சாரம் செய்வது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.