TVK BJP DMK: 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், புதிதாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகமும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. இதற்காக விஜய் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறார். தனது பிரதான எதிரியான திமுகவை கடுமையாக சாடி வருவதோடு, பாஜகவையும் குறை கூறி வருகிறார். இதனை தொடர்ந்து பாஜகவின் மையக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய மாநில துணை தலைவர் குஷ்பு தேர்தலுக்கான பணிகளும், கூட்டணி குறித்த ஆலோசனையும் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும், எங்களுக்கும் அதிமுகவிற்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் திமுக பற்றியும், இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழா குறித்தும் பேசினார்.
திமுகவை குடும்ப அரசியல் என்றும், திமுக அரசு பெண்களை பற்றி பெருமையாக பேசுகிறது ஆனால், இளையராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்ததாக தெரியவில்லை என்று கூறியிருந்தார். விஜய் பாஜகவை கூறியதை பற்றி பேசிய அவர் எல்லோரும் விமர்சனம் செய்வார்கள் ஆனால், அந்த விமர்சனத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்றும், விஜய் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் கூறினார்.
ஏற்கனவே விசிக கட்சியை சேர்ந்த மோசஸ் என்பவர் விஜய் அரசியலில் கற்று கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்று கூறியிருந்தார், அதே போல் இப்பொழுது குஷ்புவும் அரசியல் வரலாறு என்ன சொல்கிறது என்பதை விஜய் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என கூறியிருக்கிறார்.