வீடு கட்டிய பிறகு அதனை எவ்வாறு பராமரித்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Photo of author

By Janani

வீடு கட்டிய பிறகு அதனை எவ்வாறு பராமரித்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Janani

Know how to maintain a house after construction!!

தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டிக்கொள்ள வேண்டும் என்பது இன்று பலருடைய கனவாக இருக்கிறது. அவ்வாறு தனது கனவினை நிறைவேற்றிக் கொள்ள ஓடி ஓடி உழைத்து சேர்த்த பணத்தில் ஒரு நல்ல வீட்டினை கட்டுவோம். அவ்வாறு வீட்டினை கட்டும் பொழுது செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீடு பிற்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே ஒரு புதிய வீட்டினை கட்டுகிறோம் என்றால் எவ்வாறு கட்ட வேண்டும்? பிற்காலத்தில் வீடுகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? என்பது குறித்த தகவல்களை நாம் முன்னரே அறிந்து கொள்வது நல்லது.
நாம் என்னதான் வீட்டினை பார்த்து பார்த்து கட்டினாலும் கூட நமது வீட்டில் சில ஆண்டுகளுக்குப் பிறகு விரிசல்கள் விழுந்து விடுகிறது. அதற்கு காரணம் வீட்டினை கட்டும்பொழுது அதிக அளவில் சிமெண்டினை பயன்படுத்துவதும் மற்றும் வெயிலின் தாக்கமுமே இதற்கு காரணமாக அமைகிறது. இவ்வாறு விரிசல்கள் ஏற்பட்டால் அதனை கண்டுக்காமல் விடாமல் அவ்வப்போதே அந்த விரிசல் உள்ள இடத்தில் பழைய சிமெண்ட் கலவையினை எடுத்துவிட்டு புதிய சிமெண்ட் கலவையை கொண்டு பூசி விடுவது நல்லது.
இந்தப் பிரச்சனை மட்டுமல்லாமல் சுவற்றிற்கு இடையே நாம் அடிக்கக்கூடிய பைப் லைனில் ஏதேனும் லீக்கேஜ் இருந்தாலும் சுவர்களில் பாதிப்புகள் ஏற்படும். எனவே தண்ணீர் லீக்கேஜ் ஆகிறது என்ற பிரச்சனை நமக்கு தெரிய வந்தால் அதனையும் அப்போதே சரி செய்து விடுவது நல்லது. இல்லை என்றால் வீட்டின் சுவர்கள் பாதிக்கப்படும். அதேபோன்று வீட்டின் மேல் வைக்கக்கூடிய வாட்டர் டேங்க்கிலும் லீக்கேஜ் இருந்தால் அதனையும் பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும்.
வீட்டின் செப்டிக் டேங்கினை வருடத்திற்கு ஒரு முறையேனும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதேபோன்று வீட்டின் டாய்லெட்டில் டிஷ்யூ பேப்பர் மற்றும் நாப்கின்களை போடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டின் மேலே வைத்திருக்கும் வாட்டர் டேங்கினையும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து கொள்வது நல்லது. வீட்டின் மர சாமான்களான ஜன்னல், கதவு போன்றவைகளில் கரையான் போன்று ஏதேனும் இருக்கிறதா? மர துகள்கள் ஏதேனும் கீழே விழுகிறதா? என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் வார்னிஷ் போன்ற பெயிண்டுகளை பயன்படுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் பால்கனி மற்றும் படிகளில் வைத்துள்ள கம்பிகள் துருப்பிடித்து இருந்தால் அதனையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு துருப்பிடித்து இருந்தால் அதனை சுத்தம் செய்து வெல்டிங் வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் மொட்டை மாடிகளில் ஒரு சிலர் கல்லினை பதித்து வைத்திருப்பர், அதே சமயம் ஒரு சிலர் வெறும் காரையாக விட்டு வைத்திருப்பர். அந்த இடங்களில் மழை காலங்களில் தண்ணீர் நிற்பதால் அந்த தண்ணீர் ஆனது ஊடுருவி வீட்டின் உள்ளேயும் லீக்கேஜ் ஆகலாம்.
எனவே இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட தண்ணீர் லீக்கேஜ் ஆகாதவாறு பெயிண்டுகள் மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. அதனை வாங்கி பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நமது வீட்டினை பாதுகாத்துக் கொள்ளலாம். வீட்டில் போடக்கூடிய டைல்ஸ் ஏதேனும் ஒன்று உடைந்தாலும் அதனை அப்போதே மாற்றி விட வேண்டும். இல்லை என்றால் அடுத்தடுத்து அதன் அருகில் உள்ள டைல்ஸ்களும் உடைந்து விடும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நமது வீட்டின் கேட் மற்றும் மோட்டார்களுக்கு கிரீசினை போட வேண்டும்.
நாம் பல லட்சங்கள் செலவு செய்து நமது வீட்டினை கட்டுகிறோம். ஆனால் அந்த வீட்டினை வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பதை பார்த்து சரி செய்து கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது வீடானது காலாகாலத்திற்கும் நிலைத்து நிற்கும்.