உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமம்’ என்ற பழமொழியின் மூலம் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தெரிந்து கொள்ளலாம். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்த கடலில் தான் உப்பும் நமக்கு கிடைக்கிறது. எனவே தான் உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது மிகுந்த சிறப்பை தரும்.
இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. எனவே தான் புதிய வீடு கட்டும் பொழுது அந்த வீட்டிற்குள் முதலில் எடுத்து செல்வது உப்பு தான். லட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளங்கும் உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்பொழுதும் நிறைந்து இருக்கும். ஆகையால் கல் உப்பினை குறையாமல் நமது வீட்டில் வாங்கி வைப்பது நல்லது.
வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை நேரத்தில் கடைக்குச் சென்று கல் உப்பு வாங்கி வந்து பூஜையறையில் வைத்து அதனுடன் மஞ்சள் குங்குமம் வைத்து பூஜை செய்து வழிபடுங்கள். அவ்வாறு கடைக்கு செல்லாவிட்டாலும் கூட வீட்டில் இருக்கும் உப்பினையே எடுத்து ஒரு மஞ்சள் துணியில் கட்டி அதனை மகாலட்சுமியின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்யலாம். இவ்வாறு நீங்கள் வழிபடும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் நீங்கி மகாலட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.
வீட்டின் சமையலறையில் கல் உப்பினை ஒரு பெரிய மண் ஜாடியிலோ அல்லது பீங்கான் ஜாடியிலோ வைக்க வேண்டும். நிறைந்த அந்த பானையில் இருந்து கல் உப்பினை நமது கைகளால் எடுத்து சமைக்க குறைவில்லாத செல்வம் உண்டாகும். உணவுக்கு என்றைக்கும் குறைவிருக்காது. மேலும் செல்வ செழிப்பு உண்டாகும். அதேபோன்று நாம் குளிக்கும் நீரிலோ அல்லது வீடு துடைக்கும் நீரிலோ சிறிதளவு கல் உப்பினை போட்டு குளிப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு விலகும்.
உப்பினை மட்டும் வேறு யாருக்கும் கடனாக கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் லட்சுமி நமது கையை விட்டு செல்வதாக அர்த்தம். அதேபோன்று புதியதாக ஒரு தங்கம் வாங்குகிறோம் என்றால் அதனை நமது வீட்டு கல் உப்பு ஜாடியில் போட்டு எடுத்து அணிந்து கொண்டால் தோஷம் நம்மை விட்டு நீங்கும் என்கின்றனர்.