TVK ADMK: இத்தனை வருடங்களாகவே அதிமுக, திமுக என இருந்த அரசியல் களம் தற்போது மூன்றாவது பெரிய சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. சுமார் ஒன்றரை வருடங்களே ஆன கட்சிக்கு இவ்வளவு ஆதரவு இருப்பது, மாநில கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் தவெக ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர் கட்சியாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முக்கிய தலைவர்கள் பலரும் தவெகவில் இணைய ஆர்வம் காட்டி வந்த நிலையில், தற்போது அதற்கான தொடக்க புள்ளியாக ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
அதிமுக தொடங்க பட்டதிலிருந்தே, சுமார் 50 ஆண்டு காலமாக அக்கட்சிக்காக உழைத்து வந்த அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் விஜய் முன்னிலையில் இன்று இணைந்துள்ளார். இவருக்கு ஈரோடு, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் பதிவு வழங்கப்பட்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிமுக சார்பில் 8 முறை வெற்றி பெற்ற செங்கோட்டையன், மீதமிருக்கும் மாவட்டங்களுக்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கொங்கு மண்டலம் என்றாலே அது அதிமுகவின் கோட்டையாக கருதப்படக் கூடிய பகுதி. இப்படி இருக்கும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளை விஜய், செங்கோட்டையனுக்கு ஒதுக்கியது கொங்கு மண்டலத்தை தவெக பக்கம் கொண்டு வர வேண்டுமென்ற நோக்கில் தான், அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதோடு கொங்கு மண்டலத்தில் அதிமுக வலிமையாக இருப்பதால் அதனை பற்றி நன்கு அறிந்த அதிமுக அமைச்சர் இதனை சிறப்பாக செய்து முடிப்பார் என்று விஜய் நினைப்பதாக தவெக வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய்யின் இந்த வியூகம் அதிமுகவிற்கு எதிராக தொடுக்கப்படும் அம்பு என மதிப்பிடப்படுகிறது.

