TVK: கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெகவின் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. மதியழகன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் போன்ற பலர் மீதும் வழக்கு பதியப்பட்ட நிலையில், அண்மையில் மதியழகனை திண்டுக்கல்லில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
இவரிடம் தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவரை தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இதனால் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தனர். இதற்கு நீதி மன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது.
இவர்களை தொடர்ந்து தவெகவின் கொள்கை பரப்பு செயலாளரான ராஜ் மோகனும், நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார்கள். ஏற்கனவே தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்டவர்களை இன்னும் சந்திக்காமல் இருப்பது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதனை பலரும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தலைமறைவாகி இருப்பது விஜய்க்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தவெக தரப்பின் மேல் தவறில்லை என்றால் அவர்கள் ஏன் ஓடி ஒழிய வேண்டும் என்ற கேள்வியையும் பலர் முன் வைத்து வருகின்றனர். மக்களின் பாராட்டுகள் மட்டும் வேண்டுமென அரசியல் கட்சி நினைக்க கூடாது, துயர சம்பவத்தின் போது அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.