DMK TVK NTK: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்திற்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கையில், வாக்காளர் பட்டியல் சீரமைப்பு அவசியமென்றாலும், அதை அவசரமாக மேற்கொள்வது சரியல்ல. ஏப்ரல் மாத தேர்தலை முன்னிட்டு இப்போது தொடங்குவது தவறானது.
இது எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சியாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பீகாரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டியதை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் இதுபோன்ற சதி வேலைகள் எதையும் அனுமதிக்க மாட்டோம் என திமுக கூட்டணி தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள ஹோட்டல் அகார்ட் மண்டபத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தவெக தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்க திமுக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், பாஜக கூட்டணியில் உள்ள தமாகா தலைவர் ஜி.கே. வாசனுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுகவின் அழைப்பிற்கு இந்த மூன்று கட்சிகளும் இது வரை எந்த பதிலும் அளிக்காத காரணத்தினால், அவர்கள் மூவரும் கூட்டத்தில் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

