பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பாருங்கள்!!ஏராளமான பலன்களை அள்ளித்தரும்!!

Photo of author

By Janani

தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நாம் ஏற்றக்கூடிய விளக்கானது நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும். அதிகாலை 4 மணி முதல் 5:30 மணி வரை நாம் விளக்கு ஏற்றலாம். பெண்கள் அனைவரும் தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்தவுடன் விளக்குகளை ஏற்ற வேண்டும்.
தினமும் குளித்துவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? என்ற சந்தேகத்திற்கு ஜோதிடர் இங்கு விளக்கம் அளித்துள்ளார். எப்பொழுதெல்லாம் குளிக்க வேண்டும் யார் யார் குளித்துவிட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் காண்போம். பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் அக்குழந்தை பூப்பெய்து விட்டாலோ அல்லது மாதவிலக்கு ஏற்பட்டாலோ அப்பொழுது அக்குழந்தையின் தாய் குளித்துவிட்டு தான் விளக்கினை ஏற்ற வேண்டும்.
பெண்கள் மாதவிலக்கு ஆன போதும், இல்லற வாழ்க்கையில் ஈடுபடுகின்ற நாளும் அதிகாலையில் குளித்து விட வேண்டும். இவைகளுள் எதுவுமில்லை என்பவர்கள் அதிகாலை எழுந்ததும் பல் துலக்கிய பின்னர் கை கால்களை கழுவி விட்டு விளக்கு ஏற்றலாம்.
நாம் விளக்கு ஏற்றும் பொழுது பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தாலும் விளக்கினை ஏற்றலாம். ஆனால் ஒரே அறையில் பூஜை அறையும் மற்றவர்கள் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது பூஜை அறைக்கு முன்பு எவரும் படுத்திருக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
விளக்கினை ஏற்றும் பொழுது ஒற்றை விளக்கை ஏற்றுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக இரண்டு, மூன்று என எத்தனை விளக்கு வேண்டுமானாலும் ஏற்றலாம் ஆனால் ஒற்றை விளக்கு ஏற்றக்கூடாது. குறிப்பாக ஐந்து விளக்கினை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. நல்லெண்ணெய் மற்றும் நெய் ஊற்றி விளக்கு ஏற்றுவது சிறப்பு.
அதிகாலையில் விளக்கு ஏற்றிய பின்னர் மீண்டும் சென்று தூங்க கூடாது. விளக்கு ஏற்றிய பின்னர் வீட்டின் மற்ற வேலைகளை கவனிக்க வேண்டும். அவ்வாறு தூங்க சென்றால் கடவுளின் வருகை இருக்காது. ஆனால் உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் வயதானோர் விளக்கு ஏற்றிய பின்னர் தூங்கலாம்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றுவது என்பது முப்பெரும் தேவதைகளையும், முப்பெரும் தேவர்களையும் நம் வீட்டிற்கு அழைக்கக்கூடிய ஒரு விசேஷமான செயலாகும். எனவே கடவுளை விளக்கேற்றி அழைத்து விட்டு திரும்பச் சென்று நாம் தூங்க கூடாது.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றினால் வாழ்க்கையில் வெற்றியாளராக மாறலாம். அனைத்து தேவர்களையும், கடவுள்களையும் வழிபாடு செய்வதற்கு உகந்த நேரம் இந்த பிரம்ம முகூர்த்தம். எனவே இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் அனைத்து தெய்வங்களின் அருளும் நமக்கு கிடைக்கும். மேலும் நாம் கேட்க கூடிய அனைத்து விருப்பங்களும் நிறைவேற்றப்படும்.
செல்வம் வேண்டும், நோய் நீங்க வேண்டும், ஆரோக்கியம் சிறப்பாக அமைய வேண்டும் போன்ற எந்தவிதமான பிரச்சனைகளாக இருந்தாலும் அந்தப் பிரச்சினையை கூறி வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான துன்பங்களும் நம்மை விட்டு விலகும் என்பது ஐதீகம்.
நீங்கள் எதை அடைய நினைத்தாலும் அதனை சாதகமாக மாற்றி நமக்கு தரக்கூடியது இந்த பிரம்ம முகூர்த்த வழிபாடு.