DMK NTK: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் நிலைமைகளை கடுமையாக விமர்சித்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று கூறிய அவர், அரசு மதுபான குடோன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது ஆனால் விவசாயிகளின் நெல் மூட்டைகளை பாதுகாக்க குடோன்கள் அமைக்கப்படவில்லை இது எந்த வகை முன்னுரிமை? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசு கபடி வீரர்களுக்கு ரூ.25 லட்சம் மட்டுமே வழங்கிய நிலையில், ஆந்திர மாநிலத்தின் செஸ் வீரருக்கு ரூ.5 கோடி பரிசாக வழங்கியதை சீமான் கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசு தன் மக்களைப் பற்றிய மரியாதையையே இழந்து விட்டது என அவர் குற்றஞ்சாட்டினார். அவரது உரை நடந்து கொண்டிருக்கையில், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வந்ததால், காவல்துறையினர் செய்தியாளர் சந்திப்பை நிறுத்துமாறு கூறினர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், சீமான் ஒரு நிமிடம் பேச்சை முடித்துவிடுகிறேன் எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்து முடித்தார். திரைப்படத்தினரின் அரசியல் வருகையைப் பற்றியும் சீமான் கடுமையாக பேசினார். நடிப்பு திறமை உள்ளவர்களே நாட்டை ஆள வேண்டும் என்ற மனோபாவம் ஆபத்தானது. இது தமிழ் சமூகத்துக்கு அவமானம் என்றார். தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பது அவரது தனிப்பட்ட முடிவு எனக் கூறினார். இன்றைய கல்வி வணிகமாக மாறியதால் அரசியல் பற்றிய புரிதல் குறைந்து விட்டதாகவும், தமிழ் மக்கள் பகுத்தறிவுடன் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தினார்.

