மதுரை: தங்களது கல்லா கட்ட விதிகளை மீறும் திமுக கவுன்சிலர்கள்!! கட்டிட அனுமதி குறித்து பாஜக நிர்வாகி குற்றச்சாட்டு!!
மதுரையில் இரண்டு நாட்களுக்கு முன் கள்ளகுறிச்சி விஷ சாராய சம்பவத்தை கண்டித்து, போராடிய பாஜகா நிர்வாகி ஹெச்.ராஜா கைதான நிலையில், தற்போது பாஜகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் முத்துக்குமார் அவர்கள் மதுரை மாவட்ட கலெக்டரிம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அதில் மதுரையில் உள்ள மாநகராட்சி நிலைக்குழு கவுன்சிலர்கள் சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மாவட்ட அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதாவது மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு கவுன்சிலர்கள் தொடர்ந்து அனுமதி தருவதாகவும் இதனால் மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.மதுரை மாநகராட்சியில் கட்டடம் கட்டுவதற்கு கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கும்போது மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சதுர அடி அளவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.அதற்கு மேல் கட்டடம் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்தான் அனுமதி அளிக்கவேண்டும்.
மேலும், உள்ளூர் திட்ட குழுமத்திலும் அனுமதி பெற வேண்டும்.ஆனால், இத்தகைய கட்டட வரைபட அனுமதி விவகாரத்தில், ‘மதுரை மாநகராட்சி நகரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலைக்குழு’ என்ற பெயரில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தலையிட்டு விதிமுறைகளை மீறி, வரைபட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கி வருகிறது.மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மதுரை மாநகரம் முழுவதும் ஆபத்தான நகரமாக மாறி வருகிறது.இதனை ஒழிக்கும் விதமாக மதுரை மாவட்ட அரசு கவுன்சிலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.தமிழக அரசு இதனை கண்டு கொள்ளாத பட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடருவேன்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.