பாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை

0
131
Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel
Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

பாமக அறிக்கை மூலம் சுட்டி காட்டியும் கண்டு கொள்ளாத மத்திய அரசு! இனியாவது கவனத்தில் கொள்ளுமா? ராமதாஸ் கோரிக்கை

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை கடந்த திசம்பர் 15-ஆம் தேதியே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதை மத்திய அரசு பொருட்படுத்தாததன் காரணமாகவே நிலைமை இப்போது மோசமடைந்திருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் “ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்திற்கு ரூ.1,000 கோடி கூடுதல் நிதி வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த கிட்டத்தட்ட செலவழிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி வரை ஊதியம் வழங்கப்பட வேண்டியிருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி ஊரகப் பொருளாதாரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகப்பெரிய வாழ்வாதாரத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2019-20ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.60,000 கோடியில் ஜனவரி 26-ஆம் தேதி வரை ரூ.57,500 கோடி, அதாவது மொத்த நிதியில் 96% செலவழிக்கப்பட்டு விட்டதாக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள தொகை அடுத்த 10 நாட்களுக்குக் கூட போதாது என்ற நிலையில், பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களுக்கு இத்தொகையைக் கொண்டு எவ்வாறு வேலை வழங்குவது என்ற வினா எழுந்துள்ளது.

மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக செலவழிக்கப்பட்டு விட்டது மட்டுமின்றி, ரூ.2,000 கோடிக்கும் கூடுதலாக ஊதிய நிலுவை வழங்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.300 கோடி வரை ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. தென் மாநிலங்களைப் பொறுத்தவரை கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய அனைத்து மாநிலங்களிலும் உபரித் தொகை உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் பல வாரங்களுக்கு ஊதிய பாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இதற்கு காரணம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நடப்பாண்டில் மிகக் குறைந்த அளவில் நிதி ஒதுக்கப்பட்டது தான். 2018-19 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.61,084 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்நிதியும் போதாத நிலையில், பல்லாயிரம் கோடி ரூபாய் நிலுவை வைக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் போது இவற்றைக் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட 10 விழுக்காடாவது கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டை விட குறைவாக ரூ.60,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு இது தான் காரணமாகும்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு நிதி நெருக்கடி ஏற்படும் என்பதை கடந்த திசம்பர் 15-ஆம் தேதியே அறிக்கை மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். ஆனால், அதை மத்திய அரசு பொருட்படுத்தாததன் காரணமாகவே நிலைமை இப்போது மோசமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.4686.87 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில அரசின் பங்கையும் சேர்த்து ரூ. 4977.45 கோடி நிதி இத்திட்டத்திற்கு கிடைத்தது. இந்தத் தொகை ஏற்கனவே முற்றிலுமாக செலவழிக்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டில் வேளாண் பணிகள் நிறைவடைந்து விட்டன. அடுத்த இரு மாதங்களுக்கு வேளாண் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்ற சூழலில், அவர்களுக்கு ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் வேலை வழங்கியாக வேண்டும். நடப்பாண்டில் இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பணிகளின் எண்ணிக்கை 6.91 லட்சம் ஆகும். அவற்றில் இதுவரை 3.16 லட்சம் பணிகள் மட்டுமே இதுவரை முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 3.74 லட்சம் பணிகள், அதாவது பாதிக்கும் மேற்பட்ட பணிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நடப்பாண்டிற்குள் முடிக்கப்படாவிட்டால், ஊரக வளர்ச்சியையும், பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கும். அது தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்களில் ஒன்று ஊரகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது ஆகும். இந்தியப் பொருளாதாரம் மிகக் கடுமையான பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் அதிக தொகையை முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தையே தூக்கி நிறுத்த முடியும். எனவே, நாட்டின் வளர்ச்சியையும், ஊரக மக்களின் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் அடுத்த இரு மாதங்களுக்கு செலவழிப்பதற்காக கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்திற்கு மட்டும் ரூ.1000 கோடியை கூடுதலாக அரசு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous article’தளபதி 65’ படத்தை இயக்கப்போகும் பெண் இயக்குனர்? ருசிகரத் தகவல் !
Next articleதமிழக அரசை விமர்சித்த ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு! இயலாமையில் ஸ்டாலின் புலம்புவதாக அமைச்சர் பேட்டி!!