MDMK: தமிழக அரசியல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதிலும் தற்சமயம் சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதில் முதலாவதாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். விஜய் வருகையை சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் அரசியல் களம், தற்போது புதிய கட்சியின் வருகையையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மதிமுகவிலிருந்து வைகோவால் நீக்கப்பட்ட மல்லை சத்யா நவம்பர் 20 ஆம் தேதி கட்சி துவங்க போவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இந்த செய்தி புதிய திருப்பத்தை ஏற்படுத்தியதோடு, பல்வேறு கேள்விகளுக்கும் வழிவகுத்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லை சத்யா பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். துரை வைகோ மீது குற்றம் சுமத்திய அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் வைகோவின் குடும்பத்திற்கு 250 கோடி மதிப்பில் சொத்து உள்ளது என்றும், வைகோவின் உறவினர்கள் மதுபான ஆலை வைத்திருப்பதால் அதன் மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார்.
மேலும், ராமதாஸ் அன்புமணியை ஏன் கட்சியில் சேர்த்தோம் என்று வருத்தபடுவதை போல, வைகோவும் துரை வைகோவை நினைத்து வருத்தப்படுவார் என்று அவர் எச்சரித்தார். மல்லை சத்யாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்களை எழுந்த நிலையில், திமுக கூட்டணியிலிருகும் மதிமுக மீது மல்லை சத்யா கூறிய கூற்று பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரின் புதிய அரசியல் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

