ADMK TVK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி அனைத்து கட்சிகளும் கூட்டணி கணக்குகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் விஜய்யின் தவெகவுடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த பரபரப்பான சூழலில் தான் எதிர்பாராத விதமாக தவெக பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிகழ்வு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விஜய்க்கு உதவ பாஜக முன்வந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், விஜய்க்கு ஆதரவாக பேசி வருகிறார். இந்த இரண்டு கட்சியும் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு அளிப்பது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சி என பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்து அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை வீழ்த்த விஜய் உள்ளிட்ட அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைப்பார் என்று டிடிவி தினகரன், திமுக அரசு என பலரும் கூறி வந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி கூறியது திரைமறைவில் அதிமுக, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதை உறுதி செய்திருக்கிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த கூட்டணி அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டால் அது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் மிகப்பெரிய ஆயுதமாக மாறும் என்றும் சொல்லப்படுகிறது.