மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
டெல்லியில் நிலவி வரும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து டெல்லி வந்த விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு முன்னரே பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்த நிலையில், நேற்றைய தினம் மத்திய அரசு தன்னுடைய ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியது.
நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் ஆரம்பித்த இந்த பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நீடித்தது. விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிசான் சங்கத்தைச் சார்ந்த யுது வீர்சிங் தெரிவிக்கும்போது, சட்ட விதிகள் மூலமாக விவாதிக்க வேண்டும் என்று விவசாயத் துறை அமைச்சர் தெரிவித்தார். அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம் சட்டரீதியாக விவாதிப்பதில் எந்த ஒரு பயனும் கிடையாது என்று தெரிவித்து இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் புதிய வேளாண் சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறோம். ஆனால் மத்திய அரசோ அதில் திருத்தம் கொண்டுவரும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதை நாங்கள் எப்போதும் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவிக்கும்போது சட்டத்தின் அம்சங்களை விவாதிக்க நாங்கள் விரும்பிய போதும் அதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. விவசாய சங்கங்கள் பிடிவாதமாக இருக்கின்றன என்று தெரிவித்தார்.
இதனை அடித்து இடைவேளையின்போது, விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டார்கள். சென்ற முறை பேச்சுவார்த்தையின் பொழுது விவசாயிகளின் உணவு பந்தியில் அமைச்சர்களும், அதிகாரிகளும், பங்கேற்று கொண்டு உணவு சாப்பிட்டார்கள். இந்த முறை விவசாயிகள் சாப்பிட சென்ற பொழுது அமைச்சர்கள் தனியாக அதிகாரிகளுடன் கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையில், எந்த ஒரு முடிவும் செய்யப்படாத நிலையிலே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி மாதம் எட்டாம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, பஞ்சாப் மற்றும் ஹரியானா ,உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளை சார்ந்த விவசாய சங்க நிர்வாகிகளுடன் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மறைமுகமான பேச்சு வார்த்தை அரசு நடத்திக்கொண்டிருப்பதாகவும், தகவல்கள் கிடைத்திருக்கின்றன .மத்திய அரசுக்கு சாதகமாக இருக்கின்ற விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதாகவும், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருக்கின்றார். 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கையெழுத்தும் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்ற விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இரு தரப்பிற்கும் இடையே கருத்து ஒற்றுமை இல்லாமல் 40 நாட்களுக்கு மேலாக இழுபறி நீடித்து வருகிறது.